சூரிய ஒளி உடலில் படுவதால் நமக்கு ஏற்படும்  எண்ணற்ற நன்மைகள்

சூரிய ஒளியானது நம் உடலின் மீது தினமும் சிறிது நேரமாவது படும்படி பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் தாவரங்களுக்கு எப்படி சூரிய ஒளி முக்கியமோ அதே போன்று மனிதர்களுக்கும் சூரிய ஒளி மிக அவசியம். ஆனால் நாம் வெயிலில் நின்றால் கருத்து விடுவோம் என்ற பயம் நிறைய நபர்களுக்கு இருக்கிறது. ஆனால் நம் முன்னோர்கள் உருவாக்கிய சூரிய நமஸ்காரம், பள்ளிகளில் பிரேயர் என்ற பெயரில் மாணவர்களை 15 நிமிடம் வெயிலில் நிற்க வைப்பது மற்றும் பிறந்த குழந்தைகளை சிறிது நேரம் காலை வெயிலில் காட்டுவது என்று இதற்கெல்லாம் மருத்துவ காரணங்கள் இல்லாமல் இல்லை.

உடலில் ஏற்படும் பல்வேறு விதமான நோய்களுக்கு சூரியஒளி உடலுக்கு தேவையான அளவில் கிடைக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தினமும் 20 நிமிடம் காலையில் வரும் வெயிலில் நின்றால் போதும் அதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்க முடியும். இப்போது சூரிய ஒளி மூலம் நமது உடலுக்கு கிடைக்கும் அபரி விதமான நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

சூரிய ஒளியின் நன்மைகள்

பொதுவாக மனிதன் உயிர் வாழவும் உடல் உறுப்புகள் பலம் மிக்கதாக இருக்கவும் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகிறது. உணவுகள் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது உணவின் மூலமாக கிடைப்பதை விட சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது தான் மிகவும் சக்தி வாய்ந்தது. உண்மையில் வைட்டமின் டி குறைபாடு இருந்தால் பல உடல் நல குறைபாடுகளை உண்டாக்கும். எனவே வைட்டமின் டி சத்து குறைபாடு இருப்பவர்கள் காலை வெயிலில் ஒரு 15 நிமிடம் நடந்து வந்தால் போதும்.

வைட்டமின் டி யை தோல் தானாகவே உற்பத்தி செய்துக்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும். உண்மையில் யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் என்னும் உடற்பயிற்சியும் சூரியனை மையமாகவே கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய நமஸ்காரம் காலை நேரத்தில் சூரியன் உதயத்தில் செய்யும் பொழுது உடல் உறுப்புகள் நன்றாக வேலை செய்யும் எனவே காலை வெயில்படும்படி 15 நிமிடம் நிற்பது நல்லது.

அதே போன்று குறைவான வைட்டமின் டி யின் காரணமாக கோடையை விட குளிர்காலத்தில் இதய நோய்கள் மற்றும் அது தொடர்பான பிரட்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளது. எனவே காலை சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி யின் மூலம் இதை தவிர்க்கலாம்.

கால்சியம் சத்து அதிகரிப்பு

சூரிய ஒளி உடலில் படும்போது அதன் மூலம் உடலின் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாகும் கால்சியத்தையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் எலும்பு வலுவாகி தேய்மானம், மூட்டுவாதம்,கழுத்து இடுப்பு வலி பாதிப்புகள் குறைகிறது. அதாவது எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியத்தை நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி மிக அவசியம்.

நோய்களின் பாதிப்பு குறைவு

முக்கியமாக வைட்டமின் டி சத்துக்கள் இதய பாதிப்புகள், இரத்த கொழுப்பு, சரும புற்றுநோய், நுரையீரல் மற்றும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பாதிப்புகளில் இருந்து உடலை காக்கக்கூடியது ஆகும். மேலும் சிறுகுடல், சிறுநீரகம், கணையம், மூளை என பலதரப்பட்ட உறுப்புகளின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கும் இது தேவைப்படுகிறது.

இதே போன்று காலைநேர சூரிய ஒளி படுமாறு நடை பயிற்சி செய்யும்பொழுது முந்தைய நாள் உடல் சோர்வை நீக்கி உடலை புத்துணர்வாக்கி உற்சாகமடைய வைக்கிறது. அதாவது மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்க வைக்கும் ஆற்றலை உடலில் மேம்படுத்துவதின் மூலம் அன்றைய நாள் முழுவதற்குமான உற்சாகமான மனநிலையை அடைய வைக்கிறது.

உடலில் ஏற்படும் மாற்றங்கள்

சூரிய ஒளி உடம்பில் பட்டால் இரத்ததில் நைட்ரிக் ஆக்சைட் என்கிற ரசாயனத்தை உற்பத்தி செய்கிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது. மேலும் திடிர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது. அதே போன்று உடலுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் சீராக குறைகிறது. அதுமட்டுமில்லாமல் உணவு சத்துக்களை உடலுக்கு அளித்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

முக்கியமாக காலை சூரிய கதிர்களில் உள்ள வைட்டமின் டி லிம்போஸைஸ் என்னும் இரத்த வெள்ளை அணுக்களின் ஆற்றலை அதிகரிக்கிறது. வெள்ளை அணுக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதன் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளின் பாதிப்புகளை உடலில் இருந்து நீக்கும் கவசமாக சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் வைட்டமின் டி உள்ளது.

மேலும் சூரிய ஒளி செரடோனின் உற்பத்தியை தூண்டுவதால் அது நரம்பு செல்களிடையே சமிக்கைகளை அனுப்பி உடல் இயக்கத்திற்கு தேவையான உடல் உணர்வுகளை ஒழுங்கு படுத்துகிறது. அது மட்டுமல்ல சரியான தூக்கம் மற்றும் சரியான நேரத்தில் எழுந்திருப்பது என்று உடல் இயக்கத்தை சீராக்கும் தன்மை கொண்டது. மேலும் மனமும் அமைதி அடைகிறது.

குழந்தைகளுக்கான நன்மைகள்

காலை வெயிலில் இளம் வயதினர் மற்றும் வயதானவர்கள் தினமும் சிறிது நேரம் நேராக கண்களை மூடி சூரியனை நோக்கியவாறு அமர்ந்திருந்தால் சூரிய ஒளியின் ஆற்றல் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. குழந்தைகள் பிறந்த பின் அவர்களின் தோல் மஞ்சள் நிறமாக காணப்படும். இது குழந்தைகளின்  உடலில் பிலுருபின் கட்டமைப்பால் ஏற்படுகிறது. மேலும் இது கல்லீரலின் திறமையற்ற செயல்பாட்டினாலும் ஏற்படக்கூடும்.

அதிகாலையில் சூரியனின் கதிர்கள் நீல நிற ஸ்பெட்ரம்களை கொண்டிருக்கும் இது உடலில் பிலுருபின் அளவை குறைக்கும். எனவேதான் மருத்துவர்கள் பிறந்த குழந்தைகளின் உடலில் சூரிய ஒளி படும்படி வைக்குமாறு அறிவுறுத்திக்கிறார்கள்.

தூக்கமின்மை

தூக்கம் வருவதற்கு காரணமாக இருக்கும் மெலக்டோனின் என்னும் ஹார்மோன் இரவில் மட்டும்தான் சுரக்கும். தினமும் போதுமான அளவு சூரிய ஒளி நமக்கு கிடைக்கும் பொழுது இரவில் மெலக்டோனின் சுரப்பதை அதிகரிக்கச்செய்து  தூக்கமின்மை பிரட்சனையை படிப்படியாக குறைகிறது.  

சரும பாதுகாப்பு

காலையில் வரும் சூரிய ஒளியில் தினமும் 10 நிமிடம் நிற்க வேண்டும். இதனால் சருமத்தில் ஏற்படும் தோல் சுருக்கம், சரும அலர்ஜி இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். சருமத்தில் வைட்டமின் டி யை அதிகரித்து சரும ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கழிவுகள் நீக்கம்

தினமும் நமது உடலின் மீது வெயில் படுவதால் தோலில் அதிக அளவு வியர்வை உண்டாகிறது. இதனால் உடலில் உள்ள கழிவுகள் தோலின் வழியாக வெளியேறி உடலில் உள்ள நச்சுக்கள் குறைய ஆரம்பிக்கிறது. இவ்வாறாக பல நன்மைகளை தருகின்ற சூரிய ஒளியானது நமக்கு இலவசமாக கிடைக்கிறது. அவற்றை வீணடிக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் நம் உடல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளைப் பெற்று வாழலாம்.

Latest Slideshows

Leave a Reply