டால்பின் வகைகள் மற்றும் அதிசய உண்மைகள்
உங்களுக்கு பிடித்த உயிரினம் எது என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விலங்குகளின் பெயர்களை சொல்லுவார்கள். உதாரணமாக மான், யானை, சிங்கம், புலி, நாய் என்று அவரவருக்கு பிடித்த விலங்குகளை சொல்லுவார்கள். ஆனால் நில வாழ் உயிரினகங்களை தவிர்த்து நீர் வாழ் உயிரினங்களில் எது பிடிக்கும் என்று கேட்டால் 90% பேர் முதலில் சொல்லக்கூடிய பதில் டால்பினாக தான் இருக்கும். இப்படி எல்லாருக்கும் பிடித்த உயிரினமாக டால்பின் ஏன் இருக்கு? மனிதர்களுடன் நட்புரீதியாக எப்படி அது பழகுகிறது. மனிதர்களுக்கு இணையான சிந்திக்கும் திறன் படைத்தது டால்பின் என்று சொல்லப்படுகிறதே அது உண்மையா? மனிதர்கள் மாதிரி அதற்குள்ளேயே கருத்துத்தொடர்பை ஏற்படுத்தி கொள்ள முடியும். ஏன் மனிதர்களிடமும் அது பேச முடியும். டால்பின் எத்தனை வயதுவரை உயிர் வாழும் அது எவற்றை அதிகமாக வேட்டையாடி சாப்பிடும் இது போன்று நிறைய சிறப்புகள் டால்பினிடம் இருக்கிறது. அவற்றைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
டால்பினை நேரில் பார்க்க வில்லையென்றாலும் அதன் படத்தையோ அல்லது அதன் காணொளியையோ பார்த்தால் ஒரு குதூகலம் ஏற்படுத்தும். அப்படி ஒரு இயற்கையான மகிழ்வை நமக்குள் ஏற்படுத்துவது தான் இந்த டால்பின். ஏனென்றால் அதுவே ஒரு குதூகலமான விலங்கு. அடிக்கடி கடலில் இருந்து வெளியே துள்ளி குதிக்கும். 20 அடி உயரத்திற்கும் அவற்றால் துள்ளி குதிக்க முடியும். இயற்கையாகவே விளையாடும் தன்மை டால்பின்களுக்கு உண்டு. தன் இனங்களுடன் மட்டுமில்லாமல் பிற உயிரினங்களுடனும் டால்பின்கள் விளையாடும்.
டால்பின் வகைகள்:
டால்பின்களை செட்டாசியன் என்னும் வரிசையின் கீழ் வகைப்படுத்தியுள்ளனர். இதன் வரிசையின் கீழ்தான் தான் திமிங்கலங்களும் வரும். இந்த செடாசியேவின் கீழ் வகைப்படுத்தப்பட்ட டால்பின்களை மூன்று குடும்பங்களாக பிரிகின்றன. டெல்பினேடே இது கடலில் வாழ கூடிய டால்பின்களை குறிக்கும், பிளாட்டானிஸ்டிடே இந்திய நதிகளில் தென்பட கூடிய டால்பின்களை குறிக்கும், இனிடே என்பது தென்அமெரிக்கா, வட அமெரிக்காவில் இருக்கக்கூடிய நதிகளில் தென்பட கூடிய டால்பின்களை குறிக்கும்.
இறுதியாக லிபோடிடே சீன நதிகளில் தென்பட்டு பின் அழிந்து போன டால்பின் இனங்களை குறிக்கும். இப்படி வகைப்படுத்தப்பட்ட டால்பின்கள் உலகம் முழுக்க அனைத்து கடல் பரப்பு, நீர் பரப்புகளில் கிட்டத்தட்ட 40 இனங்களுக்கும் மேல் பரந்து விரிந்திருக்கிறது. உலகிலேயே சின்ன டால்பின் ஹெக்டர் இது 3அடியில் இருந்து 5 அடிக்குள்தான் அதன் நீளம் இருக்கும். அதே சமயத்தில் உலகிலேயே அதிக நீளமான டால்பின் கில்லர்வேள்.
டால்பின் பெயர் காரணம்:
ஆங்கிலத்தில் ஏன் டால்பின் என்று பெயர் வந்தது என்றால் அது பண்டைய கிரேக்க மொழிமொழியில் இருந்து தழுவி வந்தது. பண்டைய கிரேக்க மொழியில் டெல்பஸ் என்றால் கர்பப்பை உள்ள மீன் என்று பொருள். அதிலிருந்து மருவிதான் டால்பின் என்ற பெயர் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. தமிழில் இதற்கு ஓங்கள் என்று பெயர். தமிழில் ஓங்கல் என்றே அழிக்கின்றனர்.
டால்பின்களின் உணவு:
டால்பின்கள் கடல் வாழ் உயிரினங்களை வேட்டையாடி சாப்பிடும். அதிகமாக மீன்களை வேட்டையாடும். இந்த மீன்களை வேட்டையாடுவதற்கு புது புது யுக்திகளை கையாளும். உதாரணமாக மீன்களை வேட்டையாட டால்பின்கள் கூட்டமாக பதுங்கி ஒன்றாக இணைத்து வேட்டையாடி சாப்பிடும்.
மற்றொரு டால்பின் இனம் நதியில் நீர் வற்றி சேர் தன்மை அதிகமாகும் சமயத்தில் அந்த நதிக்கரையோரம் சென்று கடலைபோன்று அலைகளை ஏற்படுத்தி அதன் மூலமாக மீன்களை கரைக்கு தள்ளி கரைகளுக்கு வந்து அந்த மீன்களை வேட்டையாடும். இதன் வாயில் பற்கள் இருந்தாலும் உணவை அசைப்போட இந்த பற்கள் பயன்படுவதில்லை உணவுகளை பிடிக்கத்தான் அந்த பற்கள் பயன்படுகிறது.
உணவை வேட்டையாடினால் அதை அப்படியே முழுங்கும் தன்மைதான் டால்பின்களுக்கு இருக்கிறது. இதன் வயிற்றுப்பகுதி இரண்டு வகையாக பிரிந்து இருக்கிறது. ஒன்று உணவை சேர்ப்பதற்கு மற்றொன்று உணவை செரிமாணமாக்குவதற்கு என்று பிரிந்திருக்கிறது.
டால்பின் ஒரு பாலூட்டி:
டால்பின் பார்ப்பதற்கு மீன் போல இருந்தாலும் அவை மீன் இனம் கிடையாது அவைகள் ஒரு பாலூட்டி. கடலுக்குள் வாழக்கூடிய ஒரு பாலூட்டி இனம்தான் இந்த டால்பின். இவை பாலூட்டி என்பதால் இவைகளால் முட்டை இட முடியாது குட்டிதான் இடும்.
ஒரு சமயத்தில் ஒரு குட்டியைத்தான் பெண் டால்பின்கள் இடும் எப்போதாவது அரிதாக இரட்டை குட்டிகளை இடும். இதன் கர்ப்ப காலம் 11 மாதத்தில் இருந்து 17 மாதம் வரை நீளும். குட்டி இட்டப்பிறகு அந்த குட்டியை மூன்று வருடம் வரை தன்னுடன் வைத்து பேணி பாதுகாக்கும். தன்னுடன் பேணி பாதுகாத்த குட்டி டால்பின் இறந்து விட்டால் தாய் டால்பினால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இறந்த குட்டி டால்பினின் உடலை தன்னுடனே வைத்திருந்து நீண்டநாட்கள் துக்கம் அனுசரிக்கும். அந்த அளவிற்கு மனிதர்களை போலவே பாசப்பிணைப்போடு இருக்கக் கூடிய இனம்தான் டால்பின்.
டால்பின்கள் கூட்டமாகத்தான் வாழும் அதுவும் தன்னுடைய இனத்தில் அடிப்பட்ட மற்றும் வயது முதிர்ந்த டால்பின்கள் இருந்தால் மற்ற டால்பின்கள் அவைகளுக்கு உதவி செய்யும். இப்படி தங்களின் இனமின்றி பிற இனங்களுக்கும் உதவி செய்யும். உதாரணமாக ஆபத்தில் இருக்கக்கூடிய திமிங்கலத்திற்கும் டால்பின்கள் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆபத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் டால்பின்கள் அதிகம் உதவி இருக்கிறது. இவ்வாறு டால்பின்கள் இருப்பதால்தான் அவற்றை உற்றநண்பர்களாக தமிழக மீனவர்கள் பார்க்கிறார்கள்.
டால்பின்களின் சுவாசம்:
டால்பினின் மேற்பரப்பில் இருக்கக்கூடிய ப்ளோஹோல் மூலமாகத்தான் மூச்சு விடுகிறது. நீருக்கு வெளியில் வந்து மூச்சை விட்டு பின் மீண்டும் மூச்சை உள்வாங்கி கொண்டு மீண்டும் கடலுக்கு அடியில் நீந்தி சென்று தனக்கு தேவையான உணவை தேடுகிறது. 15 நிமிடத்திற்கு மேல் மூச்சை அடக்கிக்கொண்டு கடலுக்கடியில் 1000 அடிவரை பயணிக்கும். இப்படி வெளியில் மூச்சை விட்டு கடலுக்குள் வாழக்கூடிய கடல் சார்ந்த உயிரினம் தான் டால்பின்.
டால்பின்களின் ஒலி குறிப்பு:
டால்பின்கள் ஒன்றோடு ஒன்று பேசக்கூடிய தன்மை வாய்ந்தது. இவைகள் ஒன்றுக்கொன்று பேசுவதற்காகவே விசில் போன்ற பல வகையான ஒளியை எழுப்பும். அதிலும் ஒவ்வொரு டால்பினும் தனக்கென்ற ஒரு ஒலி
வடிவத்தை உருவாக்கி கொள்ளும். நமக்கு எப்படி கை ரேகை வித்தியாசப்படுகிறதோ அதே போன்று ஒவ்வொரு டால்பின்களுக்கும் இந்த ஒலி குறிப்பு வித்தியாசப்படும். இன்னொரு ஆச்சரியன் என்னவென்றால் மனிதர்கள் மாதிரியே டால்பின்களும் ஒவ்வொரு டால்பின்களுக்கு பெயர்களை வைத்துக்கொள்ளுமாம்.
அந்த பெயர் என்பது விசில் சத்தம் அல்லது வேறேதும் ஒரு சத்தமாக இருக்கும். அந்த டால்பினை அழைக்க அதற்குரிய ஒலியை எழுப்பித்தான் அழைக்கும். இதே போன்று இவை எழுப்ப கூடிய ஒலிகளை கேட்டு தன்னை சுற்றியுள்ள சூழலை சரியாக புரிந்துகொள்ள பாயோசோனார் சிஸ்டத்தை பயன்படுத்துகிறது. இந்த சிஸ்டம் மூலமாக தன்னுடைய சூழலை மிகவும் தெளிவாக டால்பின்களால் புரிந்து கொள்ள முடியும். கண் பார்வை இழந்த டால்பின்கள் கூட இந்த பாயோசோனார் சிஸ்டத்தை வைத்து திறமையாக உயிர் வாழ முடியும்.
டால்பின்களின் அறிவுத்திறன்:
டால்பின்கள் மனிதர்கள் மாதிரி அறிவு திறன் படைத்த ஒரு உயிரினம். அதுமட்டுமின்றி மனிதர்களை போலவே சிந்திக்கக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது. இவற்றை வைத்து ஆராய்ச்சியும் மேற்கொடுள்ளனர். உதாரணமாக மனிதர்கள் மற்றும் குரங்குகள் மட்டும்தான் தங்களுடைய பிம்பங்களை கண்ணாடியில் அடையாளம் காணக்கூடிய உயிரினங்கள். இதற்கு அடுத்து தன்னுடைய பிம்பம்தான் என்பதை கண்ணாடியில் சரியாக அடையாளம் காணக்கூடியது இந்த டால்பின்கள்.
டால்பின்களுக்கு மத்தியில் ஆராய்ச்சியாளர்கள் கண்ணாடியை வைக்கும்போது அதில் தெரிவது தன்னுடைய நிழல்தான் என்பதை சரியாக புரிந்து கொண்டு தன்னுடை பல் எப்படி இருக்கிறது என்பதை வாய் திறந்து பார்ப்பது, தன்னுடைய வயிற்றுப் பகுதி எப்படி இருக்கிறது என்பதை வயிற்றுப் பகுதியை கண்ணாடியில் பார்ப்பது என்று நாம் எப்படி நம்முடைய அங்கங்களை பார்த்து பரவசம் அடைகின்றோமோ அது போலே இவைகளுக்கும் தன் பிம்பங்களின் பிரதிபலிப்பைப் பார்த்து பரவசப்படுகிறது.
டால்பினின் எதிரிகள்:
டால்பின்களில் ஆண் எது பெண் எது என்று வகைப்படுத்த முடியும். ஆண் டால்பின்கள் பெரிய அளவில் இருக்கும். பொதுவாக டால்பின்கள் மெதுவாகத்தான் நீந்தும் 1 மணி நேரத்திற்கு 4 கிலோமீட்டர் மற்றும் 12 கிலோமீட்டார் பயணிக்கும். அதன் தேவைக்கு ஏற்ப மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திலும் அவைகளால் நீந்த முடியும்.
ஒருநாளைக்கு 100 கிலோமீட்டர் தூரத்திற்கு நீந்தி போக முடியும். அனைவருக்கும் பிடித்தமானதாக டால்பின்கள் இருந்தாலும் இவற்றிற்கு எதிரி இனங்களும் இருக்கிறது. இவற்றிற்கான எதிரி இனமாக சொல்லப்படுவது சுறா. டைகர் ஷார்க், ஒயிட் ஷார்க், டஸ்கி ஷார்க், புல் ஷார்க் போன்ற சுறா இனங்கள்தான் டால்பின்களை வேட்டையாடி சாப்பிடக்கூடிய உயிரினங்களாக இருக்கிறது.