2023 Cricket World Cup In India: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்
2023 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கையீப் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது கையிப் நம்பிக்கை
இந்நிலையில் 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு தற்போது இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் தற்போதய பார்ம் குறித்தும் உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பு குறித்தும் முன்னாள் வீரர் கையிப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இந்தியா சொந்த மண்ணில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதால், வெற்றி பெறுவதற்கான பிரகாச வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் மற்ற அணிகளை விட மைதானங்களின் தன்மை நமக்கு நன்றாக தெரியும். இந்த தொடரில் சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். உலகக் கோப்பையை வெல்லும் திறன் கொண்ட பல வீரர்கள் நம்மிடம் உள்ளனர்.
ஆனால் சீனியர் வீரர்கள் அனைவரும் தயாராக இருப்பதுதான் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால். அது உடல் தகுதி அல்லது வடிவம் போன்றவற்றை சார்ந்தது. பந்துவீச்சில் நாங்கள் சரியாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். எங்கள் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தால் எங்களை வீழ்த்துவது மிகவும் கடினம். இந்த தொடரில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
பும்ரா மிகப்பெரிய தாக்கம்
மூத்த வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா மிகப்பெரிய காரணமாக இருப்பார். காயம் காரணமாக சில மாதங்களாக அவர் விளையாடவில்லை. ஆசிய கோப்பைக்கு திரும்புவார் என்கிறார்கள். இது இந்திய அணிக்கு நிச்சயம் நல்ல செய்திதான்.
இந்தியாவுக்கு பும்ரா தேவை. ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக பும்ராவை மிஸ் செய்வார். பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் விளையாடும் லெவனில் இடம் பெற்றால் இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். அதே போல் சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, குல்தீப், சாகல் உள்ளனர் என்றும் முகமது கைஃப் கூறினார்.