Aavesham Movie Review : ஃபகத் ஃபாசிலின் ஆவேசம் திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஃபகத் ஃபாசில் நடித்த ஆவேசம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர், ரோஷன் ஷானவாஸ், மன்சூர் அலிகான், சஜுன் கோபு மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஆவேசம் திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

படத்தின் மையக்கருத்து

கேரளாவைச் சேர்ந்த பிபி, அஜு, சாந்தன் ஆகிய மூவரும் பெங்களூரில் உள்ள ஒரு பெரிய கல்லூரிக்கு பொறியியல் படிக்கச் செல்கிறார்கள். சீனியர்கள் ரேக்கிங் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு வேகத்தில் அவர்களை எதிர்க்க முடிவு செய்கிறார்கள். சீனியர்களுடன் மோதினால் என்ன கிடைக்கும் என்பதுதான் மூவரின் கதி. மூன்று பேரையும் நாள் கணக்கில் அழைத்துச் சென்று சாப்பாடு போட்டு அடித்து வெளுக்கிறார்கள். தங்களை அடித்தவர்களை எப்படியாவது திருப்பி அடிக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் ரவுடிகளை தங்களது நண்பர்களாக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒவ்வொரு ஒயின் ஷாப்புக்கும் சென்று அங்குள்ள மக்களுடன் பழக முயல்கிறார்கள். அப்படி அவர்கள் சென்றடையும் கடைசி நபர்தான் ரங்கா (ஃபகத் ஃபாசில்).

சமீபத்தில் வெளியான படங்களில் சிறந்த ஹீரோ எண்ட்ரி என்று இப்படத்தில் ஃபகத் பாசிலின் எண்ட்ரியை  சொல்லலாம். மூவரும் ரங்காவை நெருங்க ஆரம்பித்தனர். அதே சமயம் ரங்காவும் மூவர் மீது அதீத அக்கறை காட்டுகிறார். இவர்கள் மூவருக்கும் ஒன்றாக குடிப்பது, சண்டை பார்க்க செல்வது என அனைத்து வசதிகளையும் ரங்கா செய்து தருகிறார். ரங்காவை வைத்து தங்களை அடித்த சீனியர்களை அடித்து கல்லூரியில் பிரபலம் ஆனார்கள் மூவரும். ஆனால் இந்த மூவருக்கும் உண்மையான பிரச்சனை சீனியர்ஸ் அல்ல ரங்கா தான் என்பதை சற்று தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள். என்ன பிரச்சனை? இந்த அன்பான கேங்ஸ்டரின் மறுபக்கம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதையாகும்.

ஆவேசம் திரை விமர்சனம் : Aavesham Movie Review

கேங்க்ஸ்டர் படம் என்றாலே அதில் பில்டப் கொஞ்சம் தூக்கலாக இருப்பது வழக்கம். அவேசம் படத்தில் அந்த மாதிரியான பில்டப் அதிகமாக இருக்கிறது. ஆனால் அந்த பில்டப் நாம் எதிர்பாராத வகையில் இருக்கிறது. மிகப்பெரிய ரவுடிகளின் குழுவிற்கு தலைவரான இருக்கும் ஃபகத் ஃபாசில் ஒருவரை கூட அடிப்பதில்லை. எல்லா சண்டைகளிலும் அவனது வேலை யாரை எப்படி அடிக்க வேண்டும் என்று தன் அடியாட்களிடம் கூறுவதுதான். இனி யாரையும் அடிக்க மாட்டேன் என்று அம்மாவிடம் சத்தியம் செய்த ரங்கா யாரையும் அடிப்பதில்லை என்று ஒரு ஃப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது.

ரங்கா யார்? எப்படி இவ்வளவு பெரிய ரவுடி ஆனார் என இவரைப் பற்றி சொன்ன கதைகள் எதுவும் நம்பும்படியாக இல்லை. சீரியஸ் காட்சிகளில் ரங்காவின் செயல்கள் அனைத்தும் நகைச்சுவையாகவே முடிகிறது. இவன் உண்மையிலேயே கேங்ஸ்டரா இல்லையா, ஊரை ஏமாற்றுகிறானா என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கு இருக்கும் நேரத்தில் பில்ட்-அப் காட்சிகள் நம்மை வாயடைக்க வைக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சி ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை விருந்தாக அமையும் என்பது உறுதி.

Latest Slideshows

Leave a Reply