Agni Natchathiram 2024 : நாளை முதல் ஆரம்பமாகிறது அக்னி நட்சத்திரம்

Agni Natchathiram 2024 :

வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram 2024) தொடங்கவுள்ளது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக வெப்பம் நிலவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை உச்சத்தை அடைகிறது. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் பல இடங்களில் 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இந்நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. அக்னி நட்சத்திரம் நாளை துவங்கி 25 நாட்கள் அதாவது மே 28ம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் ஏற்கனவே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சில இடங்களில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக பகல் நேரங்களில் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் வெப்பம் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எப்போதும் குளிராக இருக்கும் ஊட்டி, கொடைக்கானலில் இந்த ஆண்டு 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. நாளை அக்னி நட்சத்திரம் (Agni Natchathiram 2024) துவங்க உள்ள நிலையில், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply