Annapoorani Removed From Netflix : நயன்தாராவின் 'அன்னபூரணி' படம் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கம்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூரணி திரைப்படம் (Annapoorani Removed From Netflix) நீக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஷங்கரின் பட்டறையில் இருந்து இயக்குநராக அறிமுகமான நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். நடிகை நயன்தாராவின் 75வது படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியான நிலையில் மிக்ஜாம் புயல், தென் மாவட்ட மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பைப் பெற்ற இப்படம், கடந்த டிசம்பர் 29 அன்று Netflix OTT தளத்தில் வெளியானது.

படத்தின் மையக்கருத்து :

செஃப் ஆக விரும்பும் பிராமண குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக நயன்தாரா இப்படத்தில் நடித்திருந்த நிலையில், ​​தன கனவு வேலைக்காக தான் அசைவ உணவை சமைப்பதும் மற்றும் அந்த அசைவ உணவை ருசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. மேலும், நயன்தாராவின் முஸ்லீம் நண்பரான ஃபர்ஹான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருந்த நிலையில், ​​ராமர் வனவாசத்தின் போது அசைவ உணவு சாப்பிட்டதாகவும், கறி சாப்பிட வேண்டாம் என்று எந்த கடவுளும் சொல்லவில்லை என அந்த கதாபாத்திரம் கூறும் வகையில் இக்காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதேபோல கிளைமாக்ஸ் காட்சியிலும் பிராமணப் பெண்ணான நயன்தாரா பர்தா அணிந்து தொழுது பிரியாணி சமைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. படம் வெளியானதில் இருந்தே இந்தக் காட்சிகள் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

Annapoorani Removed From Netflix :

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இந்த படம் வேண்டும் என்றே எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பையை சார்ந்த, சிவசேனாவின் முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பையின் எல்டி மார்க் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. படத்தை தடை செய்ய வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வந்தனர். தற்போது படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து (Annapoorani Removed From Netflix) நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றது தொடர்பாக படத்தை இணைந்து தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து பரிஷர் அமைப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த கடிதத்தில், ‘படத்தில் இருந்து சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை, நெட்பிளிக்ஸில் இருந்து படத்தை நீக்குவதாக உறுதியளிக்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply