Aranmanai 4 Review : அரண்மனை 4 திரைப்படத்தின் திரை விமர்சனம்

கோடை கொண்டாட்டமாக திரையரங்கில் வெளியாகியிருக்கும் சுந்தர் இயக்கிய அரண்மனை 4 திரைப்படத்தின் முழுமையான விமர்சனத்தை (Aranmanai 4 Review) தற்போது காணலாம்.

அரண்மனை 4 :

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் ஒரு சீரிஸ் திரைப்படம் போல் வெளியாகி வருகிறது அரண்மனை. இந்தப் படத்தின் முதல் பாகத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, இந்தப் படத்தின் பாகங்களை சுந்தர்.சி தொடர்ந்து இயக்கி வருகிறார். அந்த வகையில் இரண்டாம் பாகம் ஓரளவு வெற்றி பெற்றாலும் அதே கதையை மூன்றாம் பாகமாக எடுத்ததில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அதன் நான்காம் பாகமாக அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ளார். பேய் படம், அரண்மனை, அதைத்தடுக்கும் நாயகனாக சுந்தர்.சி என ஏற்கனவே வந்த அரண்மனை படங்கள் போல், இந்தப் படமும் அப்படியே இருக்கப் போகிறது என்ற ரசிகர்களின் மனோபாவம்தான் இந்தப் படத்தில் சுந்தர்.சிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதை அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை காணலாம்.

படத்தின் மையக்கருத்து :

10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போய் காதல் திருமணம் செய்து கொண்ட தங்கை தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன் சுந்தர்.சிக்கு தகவல் கிடைக்கிறது. அவரது தங்கையின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் நெஞ்சுவலியால் இறந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு அண்ணன் சுந்தர் சி தங்கச்சி வீட்டிற்கு செல்கிறார். அவரது சகோதரியும் அவரது கணவரும் எப்படி இறந்தார்கள்? அவரது தங்கை தங்கியிருந்த வீட்டில் நடந்த அமானுஷ்ய சம்பவங்களின் பின்னணி என்ன? தனது தங்கை மகளை கொல்ல முயலும் பேய் யார்? அந்த பேயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதையாகும்.

Aranmanai 4 Review :

அரண்மனை படங்களில் அரண்மனையே மையமாக இருந்தது, ​​​​இந்தப் படத்தில் அரண்மனை போல் உணராத அளவுக்கு வீடு இயல்பாகக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல படத்தின் மிகப்பெரிய பலம் அடர்ந்த காடும் இருளும்தான். இடைவேளைக்கு முந்தைய 20 நிமிடம் மிகவும் பதட்டமான காட்சியை உருவாக்குகிறது. கே.ஜி.எஃப் வில்லன் கருடா வேடத்தில் நடித்த ராமச்சந்திர ராஜு சாமியாராக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். படத்தில் இதுவரை தமன்னா நடித்த படங்களில் பெரும்பாலும் கிளாமராகவும், நாயகனை காதலிக்கும் பெண்ணாகவும் தான் அதிகம் காணப்பட்டார். இந்த படத்தில் அவருக்கு நல்ல தாய் வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளுடன் விளையாடி குழந்தைகளை காப்பாற்ற அவர் நடத்திய போராட்டம் பார்வையாளர்களை படத்துடன் இணைக்க வைத்தது. தமன்னாதான் படத்தின் பலம் என்பதற்கு அந்த காட்சியே உதாரணமாக இருக்கிறது. ராஷி கண்ணாவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. இறுதிக் காட்சியில் சுந்தர் சி தனது மனைவி குஷ்புவையும், சிம்ரனையும் ஆட வைத்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சி பாளையத்தம்மன், அம்மன் போன்ற சாமி படத்தை ஒரு நிமிடம் நினைவூட்டுகிறது. முந்தைய அரண்மனை படங்களில் தொடர்ந்து வந்த கவர்ச்சி, காதல், பிளாஷ்பேக் என சில விஷயங்களை இந்தப் படத்தில் சுந்தர்.சி தவிர்த்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. படத்தில் குழந்தைகளின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. ஆனால், படத்தைப் பார்த்த ரசிகர்கள் பயப்படவில்லை என்பதுதான் உண்மை. குஷ்பு சுந்தர், ஏ.சி.எஸ்.அருண்குமார் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசைமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்கிறார். காடுகள், காடுகளில் இருளில் நடக்கும் காட்சிகளை அற்புதமாக படமாக்கியுள்ளார். எடிட்டர் பென்னி ஆலிவரின் எடிட்டிங் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த கோடை விடுமுறையில் உங்கள் குடும்பத்துடன் சென்று அரண்மனை 4 திரைப்படத்தை (Aranmanai 4 Review) பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply