Ayudha Poojai 2024 : ஆயுத பூஜையின் வரலாறும் கொண்டாட்டமும்

தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக ஆயுத பூஜை இருக்கிறது. இந்த ஆயுத பூஜை விழாவானது நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் மகா நவமி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வருடம் 2024, அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை (Ayudha Poojai 2024) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவற்றின் வரலாறு மற்றும் கொண்டாட்டங்களை பற்றி தற்போது காணலாம்.

ஆயுத பூஜை வரலாறு :

ஆயுத பூஜையானது புராணங்களின் படி நவராத்திரியுடன் தொடர்புடைய ஒன்றாகும். துர்கா தேவி, மகிஷாசுர அசுரனனை நவமி மற்றும் அஷ்டமி சந்திப்பில் கொன்றதாகவும், பிறகு வதத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை துர்கா கீழே போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நாளை ஆயுத பூஜையாக கொண்டாடினர் எனவும் சொல்லப்படுகிறது. அரக்கனை துர்கா வென்றதன் வெற்றியின் கொண்டாட்டமாக கருதப்படுகிறது. மகாபாரத புராண அடிப்படையில், பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் வனவாசம் காரணமாக தனது ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் அடியில் மறைத்து சென்றார். வனவாசம் முடிந்து வரும்போது, அவர் விட்டு சென்ற ஆயுதங்கள் அதே இடத்தில் இத்தனை நாட்களாக இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டார். அந்த ஆயுதத்தை மீட்டெடுத்து அதற்கு வழிபாடு செய்து, குருஷேத்திரப் போரில் வெற்றியை பதித்தார். பிறகு விஜயதசமி நாளில் வந்து வன்னி மரத்தை வணங்கினார். இதனால் தசமி நாளில், இந்தியாவில் சில பகுதிகளில் வன்னி மரங்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆயுத பூஜையின் முக்கியத்துவம் :

பண்டைய காலத்தில் ஆயுதங்களை வணங்கக்கூடிய நாளாகவே ஆயுத பூஜை இருந்தது. அது தற்போதைய காலத்தில் விஸ்வகர்மா பூஜையைப் போலவே, அனைவருமே தாங்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளுக்குமே மரியாதை செலுத்தும் விதமாக இது மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு கருவிகளும் தாங்கள் செய்யக்கூடிய தொழிலில் வெற்றியை கொடுப்பவை ஆகும். அந்த கருவிகள் சிறப்பாக செயல்பட வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு தொழில் செய்பவர் அதற்கு பயன்படுத்தக்கூடிய கருவிகளை வழிபாடு செய்வது அந்த தொழிலில் உறவுகள் மேம்படவும், தொழிலை விரிவுபடுத்தவும், தொழிலை நேர்மையாக கொண்டு செல்லவும் உதவிடும். தற்போது இருக்கக்கூடிய காலத்தில் மக்கள் தங்கள் பயன்படுத்தக்கூடிய வாகனங்களையும் வணங்க தொடங்கிவிட்டனர். இதனால் இதை வாகன பூஜை எனவும் கூறப்படுகிறது. எல்லா விதமான தீமைகளிலும் இருந்து மக்கள் விடுபட இந்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. 

Ayudha Poojai 2024 - ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் :

ஆயுத பூஜையன்று, தாங்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளை சுத்தம் செய்து கழுவ வேண்டும். அந்த கருவிகளுக்கு சந்தானம், குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை கொண்டு திலகம் வைக்க வேண்டும். சாமந்தி பூக்களை கொண்டு அவற்றை அலங்கரிக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் வண்ணம் கூட பூசிக்கொள்ளலாம். மேலும் பூஜை அறையை பூக்களை கொண்டு அலங்கரிக்க வேண்டும். அதற்கு பிறகு மாலை நேரத்தில் பொரிகடலை, சுண்டல், பூ, பழங்கள் ஆகியவற்றை வைத்து கருவிகள் அனைத்திற்கும் வழிபாடு நடத்த வேண்டும். வழிபாடு முடிந்தவுடன் கருவிகளை இயக்கி பார்க்க வேண்டும். இது கிராம புறங்களில் மிகவும் விமர்சையாக நடத்தப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply