Chandrayaan 3 Launch Today: விண்ணில் ஏவ தயாராக இருக்கும் சந்திராயன் 3

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திராயன்-3 விண்கலத்தைச் சுமந்து கொண்டு எல்விஎம்-3 ராக்கெட் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) இன்று விண்ணில் பாய உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25.30 மணி நேர கவுன்டவுன் வியாழன் கிழமை மதியம் 1 மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கண்காணிப்பு பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக நிலவில் ஆய்வு மேற்கொள்ள இந்தியா மேற்கொண்டுள்ள இந்த முயற்சி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல்

சந்திரயான் 3 திட்டத்தை இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தத் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது. மேலும், அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திரயான் 3 திட்டத்தின் பின்னணியில் உள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இவர் சென்னை ஐஐடியில் படித்தவர். சந்திரயான் 2 திட்டத்தின் இயக்குநராக வனிதா இருந்தார். அவருக்கு பதிலாக வீரமுத்துவேல் இந்த சந்திரயான் 3 திட்டத்திற்கு திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல். தென்னக ரயில்வேயில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். இவர்கள் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தனர். வீரமுத்துவேல் விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து வந்தார். சென்னை ஐஐடியில் ஆய்வுப் பட்டம் பெற்றார். அதன் பிறகு பல ஆய்வுகளை மேற்கொண்டார். சந்திராயன் 2 திட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் சந்திராயன்-3 இல் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். சந்திராயன் 3 -க்காக இவர் செய்த செயலை பார்ப்பதற்காக இந்தியாவே காத்திருக்கிறது.

Chandrayaan 3 Launch - மத்திய அமைச்சர் வருகை

சந்திராயன்-3 திட்டத்தைச் செயல்படுத்துவதைக் நேரில் காண்பதற்காக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை நேற்று சென்னை வந்தார். அங்கிருந்து வெள்ளிக்கிழமை இன்று ஸ்ரீஹரிகோட்டாவுக்குச் சென்று ராக்கெட் ஏவுதலைக் காணவுள்ளார். மறுபுறம், ராக்கெட் ஏவுவதை காண இஸ்ரோ தளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். நிலவின் தென் துருவம்: சந்திராயன்-3 ஐ 615 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

சந்திராயன்-3 விண்கலம்

சந்திராயன்-3 விண்கலத்தை ரூ. 615 கோடி ரூபாய் செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. மொத்தம் 3,895 கிலோ எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, சந்திரனின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-3 விண்கலத்துடன் உந்து கலன், ரோவர் மற்றும் லேண்டர் கலன்கள் பயணிக்கின்றன. சந்திராயன்-2 திட்டத்தின் போது அனுப்பிய ஆர்பிட்டர் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. அதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் என்பதால் இந்த முறை ஆர்பிட்டரை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பவில்லை.

அந்த வகையில் தற்போது லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் உந்து கலன் புவி வட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் உந்து கலனில் இருந்து லேண்டர் பிரிந்து நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும். ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அது நிலவில் இறங்கும். தொடர்ந்து ரோவர் மற்றும் லேண்டர் கலன்கள் 14 நாட்கள் நிலவின் தன்மையையும், சூழலையும் ஆய்வு செய்ய உள்ளன. இந்த விண்கலத்தில் மொத்தம் 7 வெவ்வேறு ஆய்வுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவை நிலவை அடைந்தவுடன் தனி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன. இந்த திட்டம் வெற்றி பெற்றால், ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நான்கவது நாடு என்ற பெருமையை இந்தியா வசமாக்கிக் கொள்ளும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி நிலவின் தென் துருவத்திற்கு சந்திராயன் -2 விண்கலம் அனுப்பப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு சந்திராயன்- 2 விண்கலம் அதே ஆண்டு செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லேண்டர் திட்டமிட்டபடி தரையிறங்கத் தவறியது மற்றும் நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதி செயலிழந்தது. அதில் இருந்து பெற்ற படிப்பினைகளை அடிப்படையாக கொண்டு புதிய சாதனையை சந்திராயன்- 3 மூலம் படைக்க இஸ்ரோ காத்திருக்கிறது.

Latest Slideshows

Leave a Reply