Chandrayaan 3 Project: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 

சந்திராயன் 3 ராக்கெட் ஏவப்பட்டதைக் கொண்டாடும் வகையில், விண்கலத்தின் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உடன் படித்த முன்னாள் மாணவர்கள் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2 வது ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 வினாடிக்கு சந்திராயன்-3 விண்கலத்தை எல்விஎம்3 M4 ராக்கெட் சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது.

சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இஸ்ரோ முடித்திருந்த நிலையில், 25.30 மணி நேர கவுன்டவுன் நேற்று முன் தினம் மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே ஏவப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் தோல்வி அடைந்தது. அதில் இருந்து பெறப்பட்ட பாடங்களின் அடிப்படையில் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள சந்திராயன்-3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரித்திருந்தனர்.

உலகமே வியக்கும் சந்திராயன் 2 திட்டத்தை தயாரித்த இரு பெண்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா ஆவார். சந்திராயன் 2 திட்ட இயக்குனராக பணியாற்றிய வனிதா முத்தையா, வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திராயன்-3 இன் தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார் .

வீரமுத்துவேல் தலைமையிலான குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு சந்திராயன்-3 விண்கலத்தை தயாரித்தது. மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்டிருந்த வீரமுத்துவேலின் முழு ஈடுபாட்டுடன் சந்திராயன்3 தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது. ஓய்வுபெற்ற இந்திய ரயில்வே ஊழியரின் மகன் வீரமுத்துவேல் சந்திராயன்-3 விண்கலத்திற்கு ஆற்றிய பனி மிகவும் மகத்தானது.

இந்நிலையில், ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, அதை கொண்டாடும் வகையில் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வந்த ரயில்வே பள்ளி இடிக்கப்பட்ட இடத்தில் வீரமுத்துவேல் பயின்ற பள்ளியில் அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Latest Slideshows

Leave a Reply