Dear Movie Review: டியர் திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் நடிப்பில் உருவான ‘டியர்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வார வாரம் ஜி.வி. பிரகாஷின் படங்கள் வெளியாகி ரசிகர்களை சோதித்து வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் படம் எப்படி இருக்கு என்பதை பார்க்கலாம்.

Dear படத்தின் மையக்கருத்து

கதாநாயனாக வரும் ஜி.வி.பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார். தூங்கும் போது சிறு சத்தம் கேட்டாலும் எழுந்து விடுவார். பெரிய சேனலுடன் இணைந்து பணியாற்ற கடுமையாக முயற்சி செய்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குன்னூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தூக்கத்தில் குறட்டை விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பல வரன்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவருக்கும் ஜி.வி.பிரகாஷுக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் குறட்டையால் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷுக்கு வேலையை இழக்கும் அளவிற்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் விவாகரத்து கேட்கிறார். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் விவாகரத்து கொடுக்க மறுத்துவிட்டார். இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்றாரா ஜி.வி.பிரகாஷ்? இருவரும் சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதையாகும்.

Dear Movie Review: டியர் திரை விமர்சனம்

படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வாரம் வாரம் ஒரு படத்தை ரிலீஸ் செய்து வரும் ஜி.வி.பிரகாஷ் அதே நடிப்பை கொடுத்து கொஞ்சம் சலிப்படைகிறார். கதாநாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வித்தியாசம் காட்டுவது சிறப்பு. கணவனுக்காக ஏங்குவதும், தன் பிரச்சனைகளை தீர்க்க முயல்வதுமாக நடிப்பில் ஜொலிக்கிறார். காளி வெங்கட்டின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. அவரது மனைவியாக வரும் பிளாக் ஷீப் நந்தினி கவனிக்க வைக்கிறார்.

ரோகிணி, தலைவாசல் விஜய், இளவரசு, கீதா கைலாசம் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் சென்று முடிக்க முடியாமல் திரைக்கதை வேறு எங்கோ சென்றுவிட்ட உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று சொல்ல முயற்சிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு பாடல் மட்டுமே கேட்கிறது. நடிப்பைப் போலவே இசையிலும் கவனம் செலுத்தலாம். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது. ஊட்டியின் அழகை மிக அழகாக படம்பிடித்துள்ளார். ஆகமொத்தத்தில் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

Latest Slideshows

Leave a Reply