Double Floor Bus Stand in Salem: சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையம்

சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. போதுமான இடவசதி, வெயில் மற்றும் மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.96.53 கோடி மதிப்பீட்டில் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்து, மாநகர பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஈரடுக்கு பேருந்துகளின் தரைதள்ளத்தில் சேலம், சின்ன திருப்பதி, வாழப்பாடி, அடிவாரம், அயோத்தியாப் பட்டணம், உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேல் தளத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் ஜங்ஷன், சித்தர் கோயில், ஓமலூர், கருப்பூர், முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகரப்பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.

முதல்கட்டமாக நேற்று தரைமட்டத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. தரை தளத்தில் போதிய இடவசதி உள்ளதால், அதிக சிரமமின்றி பஸ்கள் வந்து செல்கின்றன. பயணிகளும் கூட்டம் இல்லாமல் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். பயணிகள் லிப்ட் மற்றும் படிக்கட்டுகள் மூலம் மேல் தளத்தில் உள்ள பேருந்து நிலையத்தை எளிதாக அடையலாம். பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பேருந்து நிலையத்தை சுற்றிப்பார்த்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஈரடுக்கு பேருந்து நிலையம் குறித்து பயணிகள் கூறியதாவது: பேருந்து நிலையத்தின் மேல் தளத்தில் பேருந்து நிறுத்தும் இடம் உள்ளதால், தரைதளம் எப்போதும் வெயில் படாமல், மழை பெய்தாலும் பயணிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் வசதியாக இருக்கும். தரைத்தளம் மற்றும் மேல் தளம் முழுவதும் கான்கிரீட் தளமாக இருப்பதால் மழைக்காலங்களில் சேற்றில் நடமாடும் சிரமம் இருக்காது. பேருந்து நிலையத்தை தூய்மையாகவும், அதில் உள்ள அடிப்படை வசதிகளை முறையாகவும், மாநகராட்சி பராமரித்து வந்தால் பயணிகள் எப்போதும் திருப்தியுடன் பேருந்து நிலையத்தை பயன்படுத்த முடியும் என்று கூறினர்.

Latest Slideshows

Leave a Reply