Gandhi Jayanti 2024 : காந்தி ஜெயந்தியின் வரலாறும் முக்கியத்துவமும்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த 2024ம் ஆண்டு மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளை நாம் கொண்டாட (Gandhi Jayanti 2024) தயாராகி வருகிறோம். மகாத்மாவின் அகிம்சை மற்றும் உண்மைக்கு மதிப்பளிக்கும் இந்த நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை பார்க்கலாம்.

மகாத்மா காந்தியின் பிறப்பு :

  • அக்டோபர் மாதம் 2ம் நாள் 1869ம் ஆண்டு குஜராத்தில் உள்ள முக்கிய துறைமுக நகரமான போர்பந்தரில் கரம்சந்த் காந்திக்கும், புத்லிபாய் அம்மையாருக்கும் கடைசி மகனாக மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தார்.
  • பிறகு இங்கிலாந்து யுனிவர்சிட்டி கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை நிறைவு செய்தார். வழக்கறிஞர் படிப்பை முடித்தவுடன் ஆரம்பகாலத்தில் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்தார்.
  • அங்குதான் அவர் முதன்முதலாக இனவெறி பாகுபாட்டிற்கு எதிராக ‘சத்தியாகிரகம்’ எனப்படும் வன்முறையற்ற எதிர்ப்பின் தத்துவத்தை உருவாக்கினார்.      
  • இந்த வன்முறையற்ற சத்தியாகிரகம் தான் ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களை ஒன்று திரட்டுவதற்கு ஒரு கருவியாக அமைந்தது. உப்பு காய்ச்சும் போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு போன்ற இயக்கம் மகாத்மா காந்தியை இந்தியாவின் தேசிய அடையாளமாக உருவாக்கியது.
  • இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் துரதிர்ஷ்டவசமாக நாதுராம் கோட்சே வால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் காந்தியின் அகிம்சை மற்றும் அமைதி போதனைகள் உலகம் முழுவதும் இன்றும் நிலைத்து இருக்கிறது.

காந்தி ஜெயந்தி வரலாறு :

மகாத்மா காந்தி அவர்கள் அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாக மாற்றிய ‘சத்தியாகிரகம்’ என்னும் தத்துவத்திற்கு முன்னோடியாக இருந்தார். அவரின் போதனைகள் அனைத்தும் அகிம்சை, உண்மை மற்றும் சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இவரின் தத்துவங்கள் இந்திய சுதந்திர இயக்கம் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருக்கும் சிவில் உரிமைகள் இயக்கங்களிலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் சுதந்திர போராட்டங்களில் மகாத்மா காந்தியின் பங்களிப்புகள் மற்றும் இலட்சியங்களைப் போற்றும் வகையில் மத்திய அரசு அக்டோபர் 2 ஆம் தேதியை இந்தியா முழுவதும் பொது விடுமுறையாக 1948ம் ஆண்டு அறிவித்தது.

காந்தி ஜெயந்தி முக்கியத்துவம் :

காந்தி ஜெயந்தி சமுதாயத்தில் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும், அமைதி மற்றும் அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை அனைவருக்கும் உணர வைக்கிறது. மேலும் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக கடந்த 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மகாத்மா காந்தியின் நினைவாக போதனைகள், பல்வேறு விவாதங்கள் மற்றும் போட்டிகள் நடைபெறுகின்றன. மேலும் அவரின் அகிம்சை மற்றும் உண்மை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதற்கு பட்டிமன்றம் போன்ற விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நாளைக் கொண்டாடுவதற்கு (Gandhi Jayanti 2024) முக்கிய நோக்கம் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை கௌரவிப்பதோடு, நம் வருங்கால சந்ததியினருக்கு அமைதியான மற்றும் இரக்கமுள்ள உலகத்தை வளர்ப்பதற்காக அவர் முன்வைத்த போதனைகளை நிலைநிறுத்தவும் கொண்டாடப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply