Garudan Movie Review : கருடன் திரைப்படத்தின் திரை விமர்சனம்

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் சூரி, விடுதலை படத்திற்கு  பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் “கருடன்” ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ஷிவதா, ரேவதி ஷர்மா, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் கதையை எழுதியுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘கருடன்’ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தாரா (Garudan Movie Review) என்பதை தற்போது காணலாம்.

கருடன் மையக்கருத்து :

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நட்பு, அன்பு, துரோகம், நீதி மற்றும் விசுவாசத்தை மையமாகக் கொண்ட நகரும் கோலிவுட் கதை. சிறுவயதிலிருந்தே நட்பின் இலக்கணமாக வளர்க்கும் ஆதி (சசிகுமார்) மற்றும் கர்ணா (உன்னி முகுந்தன்) ஆகியோரின் வாழ்க்கையில் ‘சொக்கன்’ என்று அழைக்கப்படும் நடிகர் சூரி வருகிறார். தேனி மாவட்ட கிராமத்தில், லாரி வியாபாரம், செங்கல் சூளை, கோவில் சொத்தை பராமரிப்பது என குடும்பமாக, ஊரின் முக்கிய புள்ளிகளாக வலம் வரும் இவர்களது வாழ்வில், சென்னையில் இருக்கும் கோவில் நிலம் ஒன்றின் பத்திரத்தால் இடையூறு வருகிறது. அந்த ஊருக்கு புதியதாக வந்திருக்கும் போலீஸ் உயர் அதிகாரியான சமுத்திரக்கனியால், அமைச்சரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் காய் நகர்த்த இவர்களது குடும்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் தொடங்குகிறது. இவற்றுக்கு நடுவே ஆதி – கர்ணன் – சொக்கன் இவர்களது உறவு என்ன ஆனது என்பதை சரியான கமர்ஷியல் அம்சங்களுடனும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்புடனும் சொல்லியிருக்கிறார்கள்.

Garudan Movie Review :

சொக்கனாக படத்தின் நாயகன் சூரி. நடிகர் உன்னி முகுந்தனின் மீது அதீத அன்பு கொண்ட அடிமையாகவும், கதையின் நாயகனாக மாஸ் காட்டியுள்ளார். நாயகனாகவும் அதே நேரம் படத்தில் காமெடி வேண்டியபோது ரசிகர்களை சிரிக்க வைத்தும் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் சூரி. ஆதி கதாபாத்திரத்தில் தனது வழக்கமான, கதைக்குத் தேவையான நடிப்பை சரியான நேரத்தில் சசிக்குமார் வெளிப்படுத்த, நண்பனையும், விசுவாசம் காட்டும் சூரியையும் உபயோகித்துக் கொள்ளும் கர்ணா கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் பொருந்திப் போகிறார். சிறந்த போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, வடிவுக்கரசி என கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை சக நடிகர்கள் வழங்க, ஷிவதா இரண்டாம் பாதியில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கதையை ஒருங்கிணைக்கிறார்.

பின்னணி இசை மற்றும் பஞ்சவர்ணக் கிளியே பாடல் வழியாக ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் யுவன். தேனியின் வறண்ட பகுதிகளையும், காதல் பாடலில் மலைப் பகுதியின் குளுமையையும், நட்பு, துரோகம் என உணர்வுக்கேற்றபடி திரை அனுபவத்தை ஆர்தர் வில்சனின் கேமரா பதிவு செய்துள்ளது. சூரியைத் தவிர கதாபாத்திரங்களில் புதுமையோ, உற்சாகமோ இல்லை. சூதாட்டமும் அடிமைத்தனமும் கர்ணனின் குணாதிசய மாற்றத்திற்கு வலுவான காரணத்தைச் சேர்த்திருக்கலாம். நாயைப் போல இருந்தேன், என்னை மனிதனாக்கினாய் போன்ற வசனங்களைத் தாண்டி, தன் நம்பிக்கை யாருக்காக என்பதைச் சரியாக அடையாளம் காட்டிய கதையைப் பாராட்டுகிறார். ஆக மொத்தத்தில் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று விசுவாசமான கருடனை (Garudan Movie Review) ரசிக்கலாம்.

Latest Slideshows

Leave a Reply