Happy Birthday Vadivelu : நகைச்சுவை நாயகன்|வடிவேலுவின் பிறந்தநாள்

Happy Birthday Vadivelu : தமிழ் சினிமாவின் வைகைப்புயல் என்று அழைக்கப்படும் நடிகர் வடிவேலு இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து (Happy Birthday Vadivelu) தெரிவித்து வருகின்றனர்.

வடிவேலுவின் வருகை :

நடராஜன் பிள்ளை மற்றும் பாப்பா சரோஜினிக்கு 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறந்தார் வடிவேலு. வடிவேலுவின் இளமைக் காலத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பம். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை நடிப்புத் திறமைக்காக வைகைப்புயல் என்ற பட்டத்துடன் பரவலாக அறியப்படுகிறார். பெரும்பாலான தமிழ் மக்கள் அவரை சிரிக்கும் வைத்தியராகவே பார்த்தார்கள். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையை கவுண்டமணி செந்தில் என்று ஒரு காலத்தில் அழைத்தார்கள். அப்போது பெரும்பாலும் கவுண்டமணி அடி கொடுப்பவராகவும், செந்தில் அடி வாங்கியவராகவும் இருந்தார். அப்போது அந்த நகைச்சுவை காட்சிகளை தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். இவர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்து பின்னர் தமிழ் சினிமா நகைச்சுவை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் வடிவேலு.

வடிவேலு 1990 ஆம் ஆண்டுகளின் முதல் பாதியில் தான் சினிமாவில் நுழைந்தார். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படம்தான் வடிவேலின் திரையுலக அறிமுகம் ஆகும். ஒரு நிகழ்ச்சியில் பேச வந்த நடிகர் ராஜ்கிரண், வடிவேலுவின் திறமையைக் கண்டு வடிவேலுவை சினிமாவுக்குள் கொண்டு வந்தார். 

Happy Birthday Vadivelu - நகைச்சுவை நாயகன் :

பொதுவாக நகைச்சுவைத் துறையில் வரும் நடிகர், நடிகைகள் மற்றவர்களை கிண்டல் செய்வது, சமூகப் பிரச்சனைகளைப் பேசுவது, தன்னைத் தானே வருத்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது போன்ற ஏதேனும் ஒரு வகையை கையில் எடுப்பார்கள். இதில் வடிவேலு 3-வது ரகம். ஒரு படத்தில் அவர் பேசிய வசனம் ஒன்று, ‘ஊருக்குள்ள நாங்க அடி வாங்காத இடமே இல்லை’ என்று சொல்வார். அந்தளவிற்கு ஒவ்வொரு படத்திலும் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் வசனங்களை வெளுத்து வாங்குவார்.

வடிவேலுவைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் என்ன மாதிரியான ஹேர் ஸ்டைல், உடை, எந்த ஊர்க்காரன் என்பதுதான் ஒவ்வொரு ரசிகனும் எதிர்பார்க்கிறான் என்பதே உண்மை. பென்சில் மீசையில் தொடங்கி துபாய் ஜிகு ஜிகு டிரஸ் வரை வடிவேலுவின் ஒவ்வொரு படமும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தது உண்மைதான். வடிவேலு சினிமாவில் நடிக்காவிட்டாலும் வடிவேலுவின் நகைச்சுவை இல்லாத நாளை நினைத்துப் பார்க்க முடியாது. காட்சியமைப்புகள், மீம்ஸ் டெம்ப்ளேட்கள், ஸ்டிக்கர்கள், பேசும் டயலாக்குகள் என எங்கும் வடிவேலுதான்.

வடிவேலுவின் வேடங்கள் :

யோசித்துப் பார்த்தால் வடிவேலு சினிமாவில் செய்யாத கேரக்டர்களே இல்லை. வேலைக்கு செல்லாதவர்கள், சுயதொழில் செய்ய விரும்புபவர்கள், பஸ் கண்டக்டர்கள், டாக்டர்கள், பிணம் எரிப்பவர், ஆட்டோ டிரைவர்கள், கொரியர் நிறுவனம் நடத்துபவர் என அந்தந்த தொழிலில் தவிப்பவர்கள் பார்த்தாலே கஷ்டத்தை மறந்து வாய்விட்டுச் சிரிப்பார்கள். காரணம் வடிவேலு அந்தந்த துறையில் என்னென்ன சிக்கல்களை வேலை செய்பவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை தன்னுடைய நகைச்சுவை வழியாக சொல்லியிருப்பார்.

அதேபோல் குடும்ப உறவுகளின் பிரச்சனையும் வடிவேலு நகைச்சுவையில் சொல்லியிருப்பார். அப்பா முதல் குழந்தைகள் வரை எல்லாவற்றிலும் ஒரு ஆண் என்ன தேடுகிறான் என்று நினைக்கும் போது, ​​திரையில் அவர் பேசும் டயலாக் தானாகவே நம் நினைவுக்கு வரும். சுனா பானா, சுமோ, படித்துறை பாண்டி, கைப்புல்ல, வீரபாகு, நாய் சேகர், காண்டிராக்டர் நேசமணி, சலூன்கடை சண்முகம், தீப்பொறி திருமுகம், அலெக்ஸ் பாண்டியன், வக்கீல் வண்டு முருகன், என்கவுன்டர் ஏகாம்பரம், வெடிமுத்து, முருகேசன் என வடிவேலுவின் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தமிழ் சினிமாவின் அடையாளமாகும்.

பன்முக நடிகர் :

வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டும் பார்க்க முடியாது. நகைச்சுவையில் சிறந்து விளங்குவது போல் குணச்சித்திர நடிப்பிலும் மிரட்டுகிறார். வடிவேலு திரையில் அழும்போது நமக்கும் உள்ளுக்குள் வருத்தம் வரும். பொற்காலம், அன்னை காளிகாம்பாள், எம் மகன், மாமன்னன் வரை நடிப்பில் முன்னணி பிரபலங்களை தூக்கி சாப்பிட்டு வருகிறார். அதேபோல் பாடகராகவும் பல படங்களில் சூப்பர் பாடல்களை பாடியுள்ளார். நடிகர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் பாடகர் எனப் பன்முகத் திறமை கொண்ட வடிவேலு இன்றும் ‘பெரும் கலைஞராக’ கொண்டாடப்படுகிறார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் (Happy Birthday Vadivelu).

Latest Slideshows

Leave a Reply