India vs West Indies Practice Match: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் 2 நாள் பயிற்சி ஆட்டம்.. பி.சி.சி.ஐ முடிவு..
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்கள் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா இரண்டு டெஸ்ட், 3 ODI மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும், இளம் வீரர்கள் யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், ருத்ராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் பலர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராகும் வகையில் ரஹானே தலைமையிலான இந்திய வீரர்கள் சிலர் கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணைந்தனர். இதனை அடுத்து இந்திய வீரர்கள் எல்லோரும் பீச்சில் ஜாலியாக வாலிபால் விளையாடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன் இந்திய அணி எந்த பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பி.சி.சி.ஐ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகளுக்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள யாஷ்வி கெய்ஷ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் போன்றோருக்கு இந்தப் போட்டி நல்ல பயிற்சியாக அமையும் எனத் தெரிகிறது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.