INS Arighat: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது..!

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிகாட் (INS Arighat) விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த நீர்மூழ்கிக் கப்பல் பல விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த  நிலையில் தற்போது பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்  மற்றும் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. அரிகாட் ரக  நீர்மூழ்கிக் கப்பலானது  இந்தியாவின் அணுசக்தியை மேலும் வலுப்படுத்தும் என்று திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எஸ் அரிகாட் (INS Arighat) :

6,000 டன் எடையுள்ள ஐ.என்.எஸ் அரிகாட் (INS Arighat) அதன் முன்னோடி அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான அரிஹந்துடன் (INS Arihant) முக்கிய அங்கமாக இணைகிறது. இது நிலம் மற்றும் கடலில் உள்ள தளங்களில் இருந்து அணு ஏவுகணைகளை ஏவுவதற்கான ஒரு நாட்டின் திறனைக் குறிக்கிறது. அணுசக்தி  திறன் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒரு பகுதியாக தற்போது மாறி வருகிறது. முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் 2009-ல் தொடங்கப்பட்டு 2016-ல் கடற்படையில் இணைக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கு முதல் முறையாக கடல்வழி தாக்கும் திறன் கிடைத்தது. தற்போது ஐ.என்.எஸ் அரிகாட் (INS Arighat) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டதன் மூலம் கடற்படையின் அணுசக்தி தாக்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் பலம்

ஐ.என்.எஸ் அரிகாட் (INS Arighat) நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைவது மிகவும் முக்கியமானது என்று பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடி கூறியுள்ளார். ‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் காலத்தில் இது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதியாக ரஷ்யாவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது. ஏனெனில் அரிகாட் நீர்மூழ்கிக் கப்பலில்  நிறுவப்பட்ட அணுஉலை 83 மெகாவாட் திறன் கொண்டது. இவ்வளவு சிறிய அணு உலையை உருவாக்குவது எளிதானது அல்ல என அவர் தெரிவித்துள்ளார். ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை மூன்று கட்டங்களாகவும் ஐந்து அரிஹந்த் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கவும் இந்தியா திட்டமிட்டு வருகிறது. மேலும் ப்ராஜெக்ட் 75 , ப்ராஜெக்ட் 76 மற்றும் ப்ராஜெக்ட் 75 ஏஎஸ் ஆகிய திட்டங்களின் மூலம்  கடற்படைக்கு மேலும் 15 புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் கிடைப்பதால் இந்திய கடற்படையின் பலம் பல மடங்கு அதிகரிக்கும் என ராகுல் பேடி தெரிவித்துள்ளார்.

இரகசியமான கப்பல்

அணு ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு  நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படுகிறது. காரணம் நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் நகர்கிறது அதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இது மிகவும் ரகசியமாகவே உள்ளது என ராகுல் பேடி கூறியுள்ளார். அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த வகையான நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் விஷயத்தில் சீனா இந்தியாவை விட மிகவும் முன்னிலையில் இருந்தாலும் ஐ.என்.எஸ் அரிகாட் (INS Arighat) கப்பல் இந்தியாவுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் என்றார்.

Latest Slideshows

Leave a Reply