IPL 2023 PBKS vs LSG: பஞ்சாப் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் 16 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு அணிகளும் விளையாடியது. இதில் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கைல் மயர்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். 7வது ஓவரில் கைல் மயர்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
குருணால் பாண்டியா 18 ரன்களும், நிக்கோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் மறுபுறம் நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, கே.எல்.ராகுலும் 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிருஷ்ணப்பா கவுதம், யுத்விர் சிங் ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே குவித்தனர். பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக சாம் கரன் 3 விக்கெட்டும், ரபாடா 2 விக்கெட்டும், அர்ஷ்திப் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்பீரித் பரார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
160 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு ஷிகர் தவான் இல்லாததால் புதுமையான இணை ஓப்பனிங்காக களம்கண்டது. ஆனால் அது நீடிக்கவில்லை. அறிமுக வீரராக களமிறங்கிய அதர்வா தைடேவை லக்னோ அணியின் அறிமுக வீரர் யுத்விர் சிங் ஒரு ரன் கூட எடுக்க விடாமல் அவுட்டாகினர். மட்டுமின்றி மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கையும் 4 ரன்களில் ஆட்டமிழக்க செய்தார்.
யுத்விர் சிங்கின் அபார பந்துவீச்சால் பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் கண்டது. அவர்கள் அணியை மீட்டெடுக்க முயன்றனர். மேத்யூ ஷார்ட் மற்றும் ஹர்பிரீத் சிங் பாட்டியா இருவரும் சேர்ந்து விளையாடினர் இதில் மேத்யூ ஷார்ட் விறுவிறுப்பான தொடக்கத்தை எடுத்தார் ஆனால் அதே வேகத்தில் 34 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனை தொடர்ந்து ஹர்பிரீத் சிங் 22 ரன்களுடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டார்.
ஆல்-ரவுண்டர் சிக்கந்தர் ராசா, சாம் கரனை ரவி பிஷ்னோய் கவனித்துக் கொண்டு பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், திறம்பட விளையாடிய ராசா அரைசதத்தை கடந்த நிலையில் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் 23 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிய பஞ்சாப் அணி 3 பந்துகள் மீதமிருக்க, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.