J Baby Movie Review : ஜே பேபி திரைப்படத்தின் திரை விமர்சனம்

ஊர்வசி, தினேஷ், லொள்ளு சபா மாறன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜே பேபி ஆகும். இந்நிலையில், படத்தின் விமர்சனத்தை (J Baby Movie Review) பார்க்கலாம். நீலம் புரொடெக்ஷன்ஸ் தயாரித்து, அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் உள்ளிட்டோர் நடித்த ஜே பேபி திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஜே பேபி கதைக்களம் :

தாய் ஊர்வசிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என 5 குழந்தைகள் உள்ளன. கணவர் இறந்த பிறகு குழந்தைகளை தனி ஆளாக கவனித்து வந்துள்ளார். ஊர்வசியின் மூத்த மகன் மாறன். கடைசி மகன் தினேஷ். குடும்ப பிரச்சனையால் குடும்பத்தில் இருந்து தினேஷ் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். அண்ணன் மாறனைத் தவிர அனைவரும் தினேஷுடன் நல்லுறவில் உள்ளனர். அவர்களின் தாய் ஊர்வசி வீட்டை விட்டு வெளியேறி கொல்கத்தா செல்கிறார். அண்ணன் மாறனும், தம்பி தினேசும் கொல்கத்தாவுக்குச் சென்று அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். குடும்ப பிரச்சனையால் பேசாமல் இருக்கும் இருவரும் சேர்ந்து தாயை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவது படத்தின் மீதி கதையாகும்.

J Baby Movie Review :

ஊர்வசியின் கதாபாத்திரம்தான் படத்தின் மையக்கரு. படத்தின் முதல் பாதியில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தோன்றும் ஊர்வசி, இரண்டாம் பாதியில் அதிக காட்சிகளில் தோன்றுகிறார். முதல் பாதி முழுவதும் மாறனும் தினேஷும் கொல்கத்தா சென்று ஊர்வசி எங்கே இருக்கிறாள் என்று தேடுவதைப் பற்றியது. கதைக்கு இது அவசியம் ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் இரண்டாம் பாதியில் ஊர்வசி வருவதால், அவருக்குக் கொடுக்கப்பட்ட காட்சிகளும், அவரது நடிப்பும், அந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமாக்குகிறது. முதிர்ந்த நடிப்பின் மூலம் மீண்டும் தன்னை நடிப்பின் ராணி என்பதை ஊர்வசி நிரூபித்துள்ளார். குறிப்பாக நகைச்சுவை வசனங்கள் மிக சீரியஸாக வெளிப்படுத்தப்பட்டு பாராட்டுக்களைப் பெறுகின்றன. பல காட்சிகளில் கைதட்டல் பெறுகிறது. எப்போதும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் மாறன், இந்தப் படத்தில் சீரியஸ் கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறார்.

J Baby Movie Review : சில காட்சிகளில் ஊர்வசி மற்றும் தினேஷின் நடிப்பு பார்வையாளர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. டோனி பிரிட்டோவின் இசை படத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது. அம்மா பாசம், அண்ணன் தம்பி சண்டை என ‘ஜே பேபி’ குடும்பக் கதையாகும். இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. நிஜ வாழ்க்கையில் குழந்தையை மீட்க உதவிய ஜே.மூர்த்தி படத்திலும் நடித்தார். படத்தின் பாதி காட்சி கொல்கத்தாவிலும், மீதி சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன் தனது கேமரா மூலம் கொல்கத்தாவை நம்முடன் முடிந்தவரை நெருக்கமாக கொண்டுவர முயற்சித்துள்ளார். ஊர்வசிக்கான காட்சிகள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் ஜே பேபி (J Baby Movie Review) ரசிகர்களின் மனதினை உருக்கி இருக்கக் கூடும்.

Latest Slideshows

Leave a Reply