Jailer Official Trailer : பூனை போல் இருந்து புலியாக மாறும் ரஜினி...

Jailer Official Trailer :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு ரஜினி நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இந்தப் படத்தை ஏற்கனவே நயன்தாரா, சிவகார்த்திகேயனை வைத்து ‘கோலமாவு கோகிலா’ மற்றும் ‘டாக்டர்’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ஜெயிலர் படத்தில் நடித்த சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரீஃப், தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரம்மாண்ட நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ஒரு அப்பாவி கேரக்டராகவே சித்தரித்தார். பின்னர் அவருக்கு ஏதோ நோய் இருப்பதாகவும் இந்த நோய் வந்தவர்கள் முதலில் பூனை போல் அப்பாவியாக இருப்பார்கள் பின்னர் புலி போல் கோபமாகி விடுவார்கள் என விடிவி கணேஷ் ரஜினியின் குடும்பத்தினருடன் பேசுவது போன்றும், பின்னர் தலைவர் தாறுமாறாக ஆக்ஷனில் பின்னி பெடல் எடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

குறிப்பாக ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சு எல்லாம் கிடையாது வீச்சு தான் என்றும், ஃபுல்லா முடிச்சுட்டு தான் வருவேன் என்று தலைவர் பஞ்ச் டயலாக் பேசுவதும் தாறுமாறாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இப்படத்தின் டிரைலர் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். வெறி பிடித்த வில்லனாக, கொலைவெறியுடன் பேசும் விநாயகன் சுனில், யோகி பாபு, வசந்தி, ரம்யா கிருஷ்ணா, ஜாக்கி ஷெரிப் போன்றோர் இந்தக் காட்சியில் இடம் பெற்றிருந்தாலும், ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால், தமன்னா, சிவராஜ்குமார் ஆகியோரின் காட்சிகள் இடம்பெறவில்லை என்பதை கவனித்தீர்களா? வில்லன்களால் பெரிய இழப்பை சந்தித்த பிறகுதான் ரஜினி அதிரடி அவதாரம் எடுப்பதாக தெரிகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முத்துவேல் பாண்டியனை ரசிகர்கள் திரையில் காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Latest Slideshows

Leave a Reply