Jayalalitha's 76th Birthday : சரித்திரம் படைத்த சாதனைத் தலைவி

தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுகோடேவில் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி என்பது அனைவரும் அறிந்ததே. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழா (Jayalalitha’s 76th Birthday) இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரைப் பற்றி சில தகவல்களை காணலாம்.

Jayalalitha's 76th Birthday - சரித்திரம் படைத்த சாதனைத் தலைவி :

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் (Jayalalitha’s 76th Birthday) இன்று. இன்றும் தமிழகத்தின் இரும்புப் பெண்மணி என்று தொண்டர்களால் நினைவுகூரப்படுகிறார். அரசியல் ஆதாயங்களுக்காக ஜெயலலிதாவை கட்சியினர் மறந்துவிட்டாலும், உண்மையான தொண்டர்கள் அவரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள். திரைப்பட நடிகை, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர், பொதுச் செயலாளர், தமிழக முதல்வர் என, அவர் வகித்த ஒவ்வொரு பதவியிலும், பணியிலும் தனி முத்திரை பதித்தார். சிறு வயது முதலே பரதநாட்டியம், பள்ளிப் படிப்பில் மாநில அளவில் முதலிடம், கர்நாடக இசை என பன்முகத் திறமை கொண்டவர் ஜெயலலிதா. தமிழ் திரையுலகில் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பல படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக குவிய ஆரம்பித்தன. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஒளிவிளக்கு, எங்கள் தங்கம், தனிப்பறவி, முகராசி, குடியிருந்த கோவில், நம்நாடு என 28 ஹிட் படங்களை கொடுத்தவர்.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா ஆகியோருடன் வெள்ளி விழா படங்களையும் கொடுத்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் 127 படங்களில் நடித்துள்ளார். ஜெயலலிதா 7 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை பெற்றவர். 1980ல் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயலலிதா, முதலில் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்து சத்துணவுத் திட்ட உறுப்பினர், ராஜ்யசபா உறுப்பினர், முதல்வர் என உயரத்துக்கு உயர்ந்தார். அதிமுகவில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அவரது இடத்தை நிரப்ப பலர் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். சில மாதங்களிலேயே பிளவுபட்ட கட்சியை ஒருங்கிணைத்து அரியணை ஏறினார். ஜெயலலிதா 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், 6 முறை தமிழக முதல்வராகவும், 29 ஆண்டுகள் அதிமுக பொதுச்செயலாளராகவும் தன் வாழ்நாள் வரை இருந்தவர். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இந்திரா காந்திக்குப் பிறகு ஜெயலலிதா இரும்புப் பெண்மணியாகக் கொண்டாடப்படுகிறார்.

அவரது ஆட்சியில் பெண்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்பு திட்டம், இலவச ரேஷன் அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் போன்ற திட்டங்கள் இந்தியாவில் பிற மாநிலங்களை வியக்க வைக்கும் திட்டங்களாகும். அம்மா உணவகம், அம்மா மருந்தகங்கள், தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்கள் தற்போது செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீடுதோறும் மழைநீரை கட்டாயமாக சேகரிப்பது, லாட்டரி சீட்டு ஒழிப்பு, காவிரி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுதல், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுதல் என தொடர் சாதனைகளை படைத்துள்ளார். சிறுவயது முதலே அவர் வாழ்வில் பல்வேறு சோதனைகள். எல்லா சோதனைகளையும் சாதனைகளாக்கி இரும்புப் பெண்மணி ஆனார். அவர் இவ்வுலகில் இருந்து மறைந்தாலும், தனது செயல்பாடுகளால் தொண்டர்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply