முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 'Kalaithurai Vithagar Viruthu Vizha' நடைபெற்றது

Kalaithurai Vithagar Viruthu Vizha - பி.சுசிலா மற்றும் மு.மேத்தா கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெற்றனர் :

கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கும் விழா தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக அரசின் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவிஞர் மு.மேத்தாவுக்கும், பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளான்று கலைத்துறை வித்தகர் விருது (Kalaithurai Vithagar Viruthu Vizha) வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் இந்த அறிவிப்பினைச் செயல்படுத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினரின் தேர்ந்து எடுத்த ஆரூர்தாஸ்க்கு 2022-ம் ஆண்டுக்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது கடந்த 3.6.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது. இவர் திரைப்படத் துறையில் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்றவர். சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் எழுதிப் புகழ்பெற்றவர். அந்த விழாவைத் தொடர்ந்து பெண்மையைப் போற்றும் வகையில் அடுத்து வருகின்ற ஆண்டுகளில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட தமிழக முதல்வர் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த 2024 ஆம் ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருது ஆனது வழங்கப்பட்டுள்ளது. “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்று பாராட்டப்பட்ட திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும், சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் மு.மேத்தாவுக்கும்  2023 ஆம் ஆண்டுக்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

பின்னணிப் பாடகி பி.சுசீலா - ஒரு குறிப்பு :

பி.சுசீலா (89) பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் ஆந்திராவின் விஜயநகரத்தில் நவம்பர் 13, 1935 இல் பிறந்தவர். இவர் தனது 70 வருட பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ மற்றும் ‘மெல்லிசை அரசி’ என்ற முத்திரைகளை பெற்றவர். 

கவிஞர் மு.மேத்தா - ஒரு குறிப்பு :

தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தா செப்டம்பர் 5, 1945 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் பிறந்தவர். சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஏராளமான கவிதைகள், நாவல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply