Kanchana 4 Update: மீண்டும் மிரட்ட வரும் காஞ்சனா 4

நடிகர் ராகவா லாரன்ஸ் தானே இயக்கி நடிக்கும் “காஞ்சனா 4″(Kanchana 4 Update) திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். பல படங்களில் பின்னணி நடனக் கலைஞராக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர்.

இவர் 2004 ஆம் ஆண்டு நாகார்ஜுனா நடித்த தெலுங்கு திரைப்படமான மாஸ் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து ஸ்டைல் ​​படத்தை இயக்கிய பிறகு 2007ல் முனி என்ற பேய் படத்தை இயக்கினார். இந்த படம் ராகவா லாரன்ஸுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

காஞ்சனா முதல் மூன்று பாகம் :

2011 ஆம் ஆண்டு முனி படத்தின் 2ம் பாகத்தை “காஞ்சனா” என்ற பெயரில் எடுத்தார். இப்படத்தில் கோவை சரளா, லட்சுமி ராய், தேவதர்ஷினி மற்றும் ஸ்ரீமன் மற்றும் பலரும் நடித்தனர். தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார் திருநங்கை வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து காஞ்சனாவின் இரண்டாம் பாகம் 2015 ல் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்தப் படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, மயில் சாமி, ஸ்ரீமன், பூஜா ராமச்சந்திரன் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். மாற்றுத்திறனாளியாக நடித்ததற்காக நித்யா மேனன் பாராட்டுகளைப் பெற்றார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3ம் பாகம் வெளியானது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, தேவதர்ஷினி, சூரி, அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ராகவா லாரன்ஸ், அக்ஷய்குமாரை வைத்து இயக்கி வெற்றி கண்டார். மறுபுறம், ராகவா லாரன்ஸ் பல படங்களில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

மீண்டும் காஞ்சனாவை கையில் எடுத்த லாரன்ஸ் (Kanchana 4 Update)

தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே கொலைநடுங்கும் காட்சிகள் மற்றும் திகில் நிறைந்த கதையும்தான் என்ற டெம்ப்லேட்டை உடைத்து நகைச்சுவையை பேய் படங்களில் புகுத்தி சிரிக்க வைப்பது, அதே சமயம் பார்வையாளர்களை பயமுறுத்துவது என்று பேயால் முனி படத்தில் மிரளவும் வைத்தார் லாரன்ஸ். இந்த பேய் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, தற்போது காஞ்சனா 4 படத்தை இயக்க தயாராகி வருகிறார் ராகவா லாரன்ஸ். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. முதல் மூன்று படங்களைப் போலவே இந்தப் படமும் திகில் மற்றும் காமெடி ஜானரில் உருவாகும். இதற்கான படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி தானே தயாரிக்கவும் உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply