Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தி வரலாறும் கொண்டாட்டமும்

கிருஷ்ண ஜெயந்தியான இன்று இத்தினம் கொண்டாடப்படுவதன் (Krishna Jayanthi 2024) முக்கிய நோக்கம் மற்றும் கிருஷ்ணருக்கு பிடித்தவை என்ன? இத்தினத்தில் கொண்டாட்டங்கள் எப்படியிருக்கும் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

கிருஷ்ணர் அவதார வரலாறு :

துவாபர யுகத்தில் மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரத்தின் நோக்கம் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது. அதன்படி கௌரவர்களை அழித்து பாண்டவ சகோதரர்களை காத்து தர்மத்தை நிலைநாட்டினார் பகவான் கிருஷ்ணர். இதை மகாபாரதம் வாயிலாக நாம் தெரிந்துகொள்ளலாம். பாரதப் போரில் தேரோட்டியாக வரும் கண்ணன் (கிருஷ்ணர்) அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான “பகவத் கீதையாக” உள்ளது. இந்த பகவத் கீதையில் “உலகில் எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகம் தோறும் நான் அவதரிப்பேன்” என பகவான் கிருஷ்ணர் உபதேசித்துள்ளார்.

இராமரும் கிருஷ்ணரும் :

திரேதா யுகத்தில் அவதரித்த இராமரும் துவாபர யுகத்தில் அவதரித்த கிருஷ்ணரும் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்றாலும் இருவருக்கும் சிறிது கூட ஒற்றுமை கிடையாது. இராமர் ஒரு அரசரின் மகன் அரண்மனை மாளிகையில் அவதரித்தார். ஆனால் பகவான் கிருஷ்ணர் பிறந்தது ஒரு சிறைச்சாலையில் அப்பொழுது அவரது தந்தை ஒரு கைதி. இராமர் பிறந்ததும் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கிருஷ்ணர் பிறந்தது அவரது தாய் தேவகி மற்றும் தந்தை வசுதேவரை தவிர வேற யாருக்கும் தெரியாது. மாற்றான் தாய் மகனாக வளர்ந்தார். இப்படி இராமர் மற்றும் கிருஷ்ணர் இருவரின் வாழ்கையும் முரண்பாடாக இருந்தாலும் இருவரின் நோக்கமும் ஒன்று தான். அது அதர்மத்தை அழித்து தர்மத்தின் வழியில் நடப்பது. இருவரின் அவதாரத்திலும் ஒரு பெண்தான் முக்கியத்துவம் பெறுகிறாள்.

Krishna Jayanthi 2024 :

கிருஷ்ணர் பிறந்த தினமான ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு பிடித்ததாக சொல்லப்படும் அவல், வெண்ணைய், பால், தயிர், இனிப்புகள், முறுக்கு, தட்டை, சீடை, பழங்கள் என பல வகையான உணவு பொருட்களை ஆசையுடன் செய்து கிருஷ்ணருக்கு பூ மாலை தோரணங்களால் அலங்கரித்து வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் இட்டு வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு இராதை, கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர்.

பகவான் கிருஷ்ணருக்கு எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடுக்க வேண்டுமாம். பூ, பழம், தண்ணீர் என எதுவாக இருந்தாலும் சரி காரணம் ‘மனம் சுத்தமாக உள்ளவர்கள் எதைக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்வேன்’ என்பதே பகவான் கிருஷ்ணரின் வாக்கு. இதனாலேயே இத்தினத்தின் கொண்டாட்டம் மக்கள் எல்லோருக்கும் பிடித்துப் போவதாக சொல்லப்படுகிறது.

“கண்ணா'' - ''முகுந்தா'' :

பகவான் கிருஷ்ணர் தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால் தான் மக்கள் இவரை “கண்ணா”,”முகுந்தா” என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். ‘கண்ணா’ என அழைத்தால் கண்ணைப் போல காப்பான்  என்றும் ‘முகுந்தா’ என அழைத்தால் வாழ்வதற்கு இடம் அளித்து வாழ்வில் முக்தி அளிப்பான்  என்றும் நம்பப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply