Maamannan Movie New Problem: மாமன்னன் படத்திற்கு வந்த பெரிய சிக்கல்
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் உதயநிதி நடித்துள்ள படம் ‘மாமன்னன்’ ஆகும். இப்படம் வருகின்ற ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குககளில் வெளியாக உள்ள நிலையில், மாமன்னன் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’ ஆகும். இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் வடிவேலு வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகர் உதயநிதி முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவதால், இந்த படமே அவருக்கு கடைசி படமாக இருக்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். உதயநிதி, மாரி செல்வராஜ் மற்றும் வடிவேலு இவர்களின் கூட்டணி மற்றும் வித்தியாசமான தோற்றம் என ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனை அடுத்து மாமன்னன் படம் இந்த மாதம் 29 ஆம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரி ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவின் படி 2018 ஆம் ஆண்டு கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி, யோகிபாபு, ஆனந்தி, ஆகியோர் ‘ஏஞ்சல்’ என்ற படம் தயாரிக்கப்பட்டு, படப்பிடிப்பு துவங்கியதாகவும் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார். இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு நடைபெற இருக்கும் நிலையில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ள உதயநிதி இந்தப் படமே தனக்கு கடைசிப் படம் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்திற்காக பல கோடி செலவிட்டுள்ள நிலையில் இப்படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை படத்தை வெளியிட்டால், தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ‘ஏஞ்சல்’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்து தர வேண்டும் எனவும், அப்படி இல்லாவிட்டால் உதயநிதி ரூ.25 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.