Nayanthara Joins With Mathavan: நயன்தாரா, மாதவன், சித்தார்த் புதிய கூட்டணி
நயன்தாரா – மாதவன் – சித்தார்த் ஆகியோர் இதுவரை இணைந்து நடிக்காத நிலையில், முதன்முறையாக தற்போது இணையும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் எகிறியுள்ளது. நடிகை நயன்தாரா, மாதவன் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் திருமணம், குழந்தைகள் இருந்தும் கூட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் மாதவனும் தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த் தற்போது இந்தியன் 2 படத்தில் கமலஹாசனுடன் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் கோலிவுட்டைத் தாண்டி பாலிவுட்டிற்கு அடியெடுத்து வைக்க உள்ளார். அதே நேரத்தில் கோலிவுட்டில் அவர் கடைசியாக நடித்த கனெக்ட் எதிர்பார்த்த வெற்றியைத் தறவில்லை. இந்நிலையில் நயன்தாராவின் 75வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ராஜா ராணி படத்திற்கு பிறகு நடிகர் ஜெய்யுடன் நயன்தாரா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்து முடித்துள்ள ‘இறைவன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜவான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
இந்நிலையில் அடுத்ததாக நடிகர் மாதவனுடன் நயன்தாரா முதன்முறையாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல தயாரிப்பாளரான சஷிகாந்த இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இந்த படத்தின் கதை கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும், படத்திற்கு “த டெஸ்ட்” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.