NFL Recruitment 2023 : தேசிய உர நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NFL Recruitment 2023 :

மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான தேசிய உரக் கழகம் காலியிடங்களை (NFL Recruitment 2023) அறிவித்துள்ளது. தகுதியுடைய இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேசிய உர நிறுவனம் (NFL) National Fertilizers Limited என்று அழைக்கப்படுகிறது. இது மத்திய அரசால் திறம்பட நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமாக அமைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் அரசாங்கத்திற்குச் சொந்தமான மிகப்பெரிய யூரியா உர உற்பத்தி செய்யும் நிறுவனமாக தேசிய உர நிறுவனம் அமைந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திறம்பட செயல்பட்டு வருகிறது. இது இந்தியாவின் முக்கிய உரமான யூரியாவின் இரண்டாவது பெரிய உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். இந்திய விவசாயிகளின் முதுகெலும்பாக செயல்படும் இந்த நிறுவனம், அவர்களுக்கு ரசாயன உரங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இது பஞ்சாபில் நங்கல் மற்றும் பதிண்டா, ஹரியானாவில் பானிபட் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் விஜய்பூரில் (2 ஆலைகள்) ஆகிய இடங்களில் அம்மோனியா-யூரியா ஆலைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு தேசிய உரக் கழகம் செயல்பட்டு வருகிறது.

1984 ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் 7,26,000 டன் யூரியா திறன் கொண்ட நாட்டின் முதல் உள்நாட்டு எரிவாயு அடிப்படையிலான உர ஆலையை இயக்குவதற்கு தேசிய உரக் கழகம் மத்திய அரசால் நியமிக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் வணிக ரீதியிலான உற்பத்தி 1988 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதன் பிறகு விஜயப்பூரில் 2வது ஆலை தொடங்கப்பட்டது. 1997 இல், அதன் உற்பத்தி திறன் இரட்டிப்பாகி 1.45 மில்லியன் டன்னாக இருந்தது. நிறுவனம் லாபகரமாக செயல்பட்டு வருவதால் மத்திய அரசால் மினி-நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், இது மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறியது.

NFL Recruitment 2023 : இந்த புகழ்பெற்ற நிறுவனத்தில் தற்போது 89 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் கணக்கு உதவியாளர் பிரிவில் 15, மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 60, எஃப்&ஏ பிரிவில் 10, சட்டத்தில் 4 என மொத்தம் 89 பணியிடங்கள் காலியாக (NFL Recruitment 2023) உள்ளன. கணக்கு உதவியாளர் பதவிக்கு B.com, மார்க்கெட்டிங்கிற்கு MBA, எஃப்&ஏ-வுக்கு CA, ஐ.சி.டபிள்யூ.ஏ-விற்கு சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 1 ஆம் (1/12/2023) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு careers.nfl.co.in என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு அறியலாம்.

Latest Slideshows

Leave a Reply