Paralympic 2024 : பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்குகிறது பாராலிம்பிக்

17வது பாராலிம்பிக் தொடர் இன்று பாரிஸ் நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் (Paralympic 2024) நடத்தப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பாராலிம்பிக் தொடர் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பாராலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது.

Paralympic 2024 - இன்று தொடங்கும் பாராலிம்பிக் :

17வது முறையாக நடைபெறும் இந்த பாராலிம்பிக் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த பாராலிம்பிக் போட்டியில் மொத்தம் 184 நாடுகள் பங்கேற்கின்றன. பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 22 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 4 ஆயிரத்து 440க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பாராலிம்பிக் போட்டியானது (Paralympic 2024) இந்திய நேரப்படி இன்று இரவு 11:30 மணிக்கு தொடங்க உள்ளது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமாவில் பார்க்கலாம். 

கடந்த முறை, பாராலிம்பிக்கில் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் அசத்தினார்கள். இதனால் இந்த முறையும் இந்தியா அசத்தும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட மொத்தம் 84 பேர் பங்கேற்கின்றனர். இதுவரை பாராலிம்பிக் போட்டியில் அதிக அளவில் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கலந்து கொள்வது இதுவே முதல் முறை. கடந்த முறை இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றது. கடந்த ஆண்டை விட இந்த முறை இந்தியா அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள் :

கடந்த முறை தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், ஷீத்தல் தேவி, தீப்தி, அவனி லேகரா ஆகியோர் இந்திய நட்சத்திரங்களாக உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் (உயரம் தாண்டுதல்), மனிஷா, துளசிமதி, நித்யஸ்ரீ சிவன், சிவராஜன் சோலைமலை (பேட்மிண்டன்) கஸ்தூரி ராஜாமணி (வலு தூக்குதல்) ஆகிய 6 பேர் உள்ளனர். ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கமும், ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்கில் வெள்ளியும் வென்றார். ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் சீனா, பாராலிம்பிக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. பாராலிம்பிக் போட்டிக்கு சீனா மொத்தம் 284 வீரர்களை அனுப்பியுள்ளது. கடந்த பாராலிம்பிக்கில் 96 தங்கம் உட்பட 207 பதக்கங்கள் பெற்று முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய தொடக்க விழாவில் 50,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply