Pathan Box Office Collection Day 1: மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த பதான்
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஸ்பை படமான (Spy movie) பதானின் ஓபனிங் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. ஷாருக்கானின் படமான பதான் 25.01.2023 புதன்கிழமை அன்று சில மதக் குழுக்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்திய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த பதான் படத்தில் ஷாருக் கான் தீவிரவாத அமைப்போடு சண்டையிடும் உளவாளியாக நடித்துள்ளார்.
சினிமா பாக்ஸைக் கண்காணிக்கும் தயாரிப்பாளரும் வர்த்தக ஆய்வாளருமான கிரிஷ் ஜோஹர், “ வழக்கமாக பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குச் செல்லாத மேலும் விடுமுறை கூட இல்லாத வாரத்தின் நடுப்பகுதியில் ஷாருக்கானின் பதான் படம் வெளியிடப்பட்ட போதும் அது ஒரு பம்பர் ஓப்பனிங்கைக் கண்டுள்ளது என்பது வியப்பாக உள்ளது” என்று கூறினார். மேலும்” பதான் படம் வெளியிடப்பட்ட 5,000 திரையரங்குகளில், ஆக்கிரமிப்பு விகிதம் 65% முதல் 75% வரை அதிகமாக இருந்தது என்றும் பாலிவுட்டில் ஒரு படத்தின் தொடக்க நாளுக்கு அதுவும் குறிப்பாக வாரத்தின் நடுப்பகுதி நாளுக்கு இது மிகவும் அரிது” என்று ஜோஹர் கூறினார்.
திரைப்பட விமர்சகர் தரன் ஆதர்ஷ், “ முதல் நாளில் 650,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு சாதனை படைத்த பாகுபலி 2 -வுக்கு பிறகு முதல் நாளில் சுமார் 556,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு பதான் படம் சாதனையின் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் பெரிய திரைக்கு பழிவாங்க திரும்பியுள்ளதை பதான் குறிக்கிறது என்றும், மேலும் பதானில் நல்ல நட்சத்திர கூட்டம், நல்ல பாடல்கள், பொருள் மற்றும் ஆச்சரியங்கள் என அனைத்தும் நிறைந்து உள்ளன ” என்று கூறினார்.
இந்து மத ஆன்மிகத்தின் அடையாளமாக மதிக்கப்படும் காவி நிறத்தில் ( Orange colour )-ல் படநாயகி தீபிகா படுகோன் பிகினி அணிந்து பதான் படத்தில் ரேஸி என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். விளம்பர டிரெய்லர்களில் இடம்பெற்ற இந்த பாடலை கண்ட வலதுசாரி இந்து தேசியவாத குழுக்கள் பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக வலதுசாரி இந்து தேசியவாத குழுக்கள் தெரிவித்துள்ளன.
ஒடிசா அரசியல் கட்சியான கலிங்க சேனாவின் தலைவரான ஹேமந்த ராதா, “ சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபாசங்கள் நிறைந்துள்ளது” என்று கூறியுள்ளார். அந்த கட்சியின் டஜன் கணக்கான செயல்பாட்டாளர்கள் ஷாருக்கானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் படத்தின் போஸ்டர்களை கிழித்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்துள்ளனர்.
எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்த போதும் திரையரங்குகளுக்குள் பார்வையாளர்கள் திரைப்படத்தின் பாடல்களுடன் சேர்ந்து நடனமாடுவதையும், பாடுவதையும் மேலும் தங்கள் மொபைல் போன்களை காற்றில் அசைத்து வரவேற்பதையும் உள்ளூர் ஊடகங்கள் காட்டுகின்றன. தற்போது இந்த பதான் படம் இந்தியா மற்றும் வெளிநாடு என மொத்தமாக 8,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டடுள்ளது. ஷாருக்கான் வெளிநாடுகளில் வலுவான ரசிகர்களை கொண்டுள்ளார். கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இறங்குமுகமாக, அதிக தோல்விகளைக் கண்ட இந்தியத் திரையுலகிற்கு இந்த பதானின் வெற்றி மிகவும் முக்கியமானது.