Pongal Gift Package : பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு | ரூ.1000 ரொக்கம் கிடைக்குமா?

தமிழர் திருநாள் என்றும் அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் கொண்டாடப்படுகிறது. சாதி, மதம் கடந்து தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்புகளை (Pongal Gift Package) வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரூபாய் ரொக்கத்தை வழங்கியது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் 22ம் தேதி வெளியானது. ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கப்பட்டது.

அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு :

ஆனால் 2024 பொங்கலுக்கான பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால், பொங்கல் பரிசு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அரசு அதிகாரிகள் தரப்பில் இது தொடர்பாக முதல்வர் ஆலோசனையை ஏற்கனவே முடித்து விட்டதால் பொங்கல் பரிசு (Pongal Gift Package) கண்டிப்பாக வழங்கப்படும் என விளக்கம் அளித்தனர். டிசம்பர் தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனால் அனைத்து இடங்களிலும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொங்கல் பரிசு (Pongal Gift Package) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Pongal Gift Package - பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு :

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2024 ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ இனிப்பு அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கப்படும் (Pongal Gift Package) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1000 ரொக்கம் கிடைக்குமா?

தமிழக அரசின் உத்தரவின்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு (Pongal Gift Package) வழங்கப்படும், இதன் மூலம் அரசுக்கு 238.92 கோடி ரூபாய் செலவாகும் என்று தமிழக அரசின் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், ரூ.1000 ரொக்கமாக வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பாக வெளியிடும் போது ரூ.1000 ரொக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply