Poonaachi Allathu Oru Vellatin Kathai | பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை நாவலின் ஆசிரியர் பெருமாள் முருகன் . பொதுவாக ஆடுகளை பார்த்திருப்போம், ஆடு மேய்ப்பதையும் பார்த்திருப்போம். ஆனால், ஆடுகளின் மன நிலை எப்படி இருக்கும்? ஆடுகள் பேசினால் இப்படிதான் பேசுமா, ஏன் குறிப்பாக ஆடுகளைப் பற்றி பெருமாள் முருகன் பேசுகிறார். இக்கதையில் வரும் கதை மாந்தர்கள் யார்? கதை ஏன் ஒரு ஆட்டை நோக்கி நகர்கிறது போன்றவைகளை இப்பதிவில் காண்போம்.  

Poonaachi Allathu Oru Vellatin Kathai நூல் அறிமுகம்:

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – பெருமாள் முருகன் இந்நாவலை எழுதியுள்ளார். ஏன் இதற்கு இரண்டு தலைப்பு என்றால் முற்காலத்தில் நாவல்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்தது போல் அவற்றை பின்பற்றி இந்த நாவலுக்கு இரண்டு தலைப்புகளை கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இவர் ஏன் ஆட்டை மையப் படுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதையும் கூறியுள்ளார்.

நமக்கு மிகவும் பரிட்சயமான விலங்குகள் ஐந்து இதில் நாய் மற்றும் பூனை கவிதைக்குரியது, பசு மற்றும் பன்றிகள் பற்றி பேசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் எனக்கு நன்கு தெரிந்தது ஆடு மற்றும் செம்மறி ஆடு ஆகவே என் கதைக்கு ஆட்டையே எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் ஆடுகள்தான் பிரச்சனையற்றவை, எது சொன்னாலும் ஆடு தலையை மட்டுமே அசைக்கும் ஒரு அப்பாவியான விலங்கு இந்த கதைக்கு ஏற்றவாறு பொருந்த கூடியது. என்பதால், ஆட்டை கதையின் கதாநாயகியாக எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார். ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி பிறந்தது முதல் இறக்கும் வரையில் தனது இடைப்பட்ட வாழ்க்கையில் அது மேற்கொள்ளும் பயணங்களை எதார்த்தமாகவும், அழகாகவும் விவரிப்பது தான் இந்த பூனாச்சி நாவல்.

கதாநாயகி கருப்பு ஆடு ஆனால் தலைப்பில் ஏன் வெள்ளாடு வருகிறது. என்ற குழப்பம் ஏற்படும். வெள்ளாடு என்பது ஒரு ஆட்டின் வகை, செம்மறி ஆடு என்பது ஒரு வகை. வெள்ளாட்டின் வகையில் ஒரு கருப்பு ஆட்டுக்குட்டிதான் பூனாச்சி. இந்த ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு பூனை போல் இருப்பதாலும், இது மட்டுமின்றி கொங்கு வட்டார வழக்கில் பூனையைத்தான் பூனாச்சி என்று அழிப்பார்கள் அதனால் தான் இப்பெயர் வந்தது.

இந்நாவலில் வரும் கதை மாந்தர்கள் பூனாச்சி, கிழவன், கிழவி, பூவன். இந்நாவலில் வரும் ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் இயல்பாகவும், எதார்தமாகவும் ஆசிரியர் விவரித்துள்ளார். இந்நாவலை படிக்கும்போது ஆடுகளின் உணர்வுகள் இப்படித்தான் இருக்குமோ என்று நாம் உணரும் வகையில் வரிகள் அமைந்திருக்கும். மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கு மதிப்பு இருப்பது போல், விலங்குகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு இருக்கிறது என்பதை இந்த நாவல் புரிய வைக்கிறது. இந்நாவலைப்பற்றி மேலும் விரிவாக பின்வருமாறு காண்போம்.

Poonaachi Allathu Oru Vellatin Kathai - சிறப்பு பார்வை:

பூனாச்சி நாவல் எப்படி தொடங்குகிறது என்றால் ஒரு கிழவன் மலையில் உட்கார்ந்துக் கொண்டிருகிறார். அப்போது திடிரென்று உயரமான ஒரு நபர் அவர் அருகே வந்து தன்னிடம் இருந்த ஒரு ஆட்டுக்குட்டியை கொடுக்கிறார். இந்த ஆட்டுக்குட்டியை எனக்கு விற்க மனமில்லை இதை விற்க சென்றால் அனைவரும் பணத்திற்காகத்தான் இந்த ஆட்டுக்குட்டியை வாங்குவார்கள் ஆனால் இதை மனதார வளர்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த ஆட்டுக்குட்டியை அந்த கிழவனிடம் கொடுத்து விட்டு  இது சாதாரண ஆட்டுக்குட்டி கிடையாது ஏழு குட்டிகளை ஈன்றக்கூடிய ஆட்டுக்குட்டி என்று கூறி பணம் வாங்காமல் அங்கிருந்து சென்று விடுகிறார். அந்த ஆட்டுக்குட்டியுடன் கிழவன் தன் வீட்டிற்கு செல்கிறார். ஏற்கனவே கிழவனும் அவரது மனைவி கிழவியும் வறுமையில் இருந்தாலும் இருக்கிற கொஞ்சம் ஆடுகளை வைத்து கொண்டு வாழ்கின்றனர்.

இப்படி பட்ட ஒரு வீட்டிற்குதான் ஏழு குட்டிகளை ஈன்றக்கூடிய பூனாச்சி வருகிறது. இதனால் இந்த குடும்பத்திற்கு என்ன கிடைக்கிறது, எதை இழக்கிறார்கள், இதனால் பூனாச்சிக்கு என்ன கிடைக்கிறது,பூனாச்சி என்ன இழக்கிறாள் என்பது தான் இந்த நாவலின் கதை. இதில் சினை ஆடு, கிடாய்  வட்டார வார்த்தை ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கிறது. மின்சாரம் இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் கிழவன், கிழவி வீட்டில்தான் பூனாச்சி இருக்கிறாள்.

விளக்கு கூட ஏற்றாத வீட்டில் பூனாச்சி வந்த நாளன்று பூனாச்சி எப்படி வீட்டிற்கு வந்தால் என்பதில் ஆரம்பித்து பூனாட்சியின் அழகை ரசிப்பதற்கு கிழவி விளக்கை ஏற்றுகிறார். அது மட்டுமின்றி நீண்ட நாட்களுக்கு பிறகு கிழவனும், கிழவியும் பூனாச்சி வருகையை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை எல்லாம் எதார்த்தமாக சொல்லப்பட்டுள்ளது. பூனாச்சி சின்னதாக இருக்கும்போது தன்னுடைய அம்மா பக்கத்தில் இல்லை என்பதால் அவள் பால் குடிக்க கஷ்டப்படுகிறாள் என்றும், தனக்கே சாப்பாடு இல்லாத சமயத்தில் இந்த கிழவனும், கிழவியும் எப்படி பூனாச்சி சாப்பாடு கொடுக்கிறார்கள் அந்த வறுமையில் பூனாச்சி வளர்கிறாள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். இதனை அடுத்து பூனாச்சி பருவம் அடைகிறாள். அதற்கு முன் அவளுக்கு முதல் காதல் ஏற்படுகிறது.

பூவன் என்னும் ஒரு கிடாய் (ஆண் ஆடு). இந்த பூவனை வேறு ஊரில் உள்ள கிழவியின் மகள் வீட்டில் தான் பூனாச்சி சந்திக்கிறாள். அவளுடைய வீட்டை விட்டு அதாவது கிழவியின் மகள் வீட்டிற்கு கிழவி, கிழவனுடம் பயணம் மேற்கொள்கிறாள். அப்போது போகும் வழியில் பூனாச்சி காணாமல் போகிறாள் இதனால் அந்த கிழவிப்படும் கஷ்டம், இவற்றையெல்லாம் கடந்து பூனாட்சி பூவனை சந்திக்கும் தருணம். அவர்களின் அழகான காதல்! பூவனும்,  பூவாச்சியும் நிறைய இடங்களுக்கு சுற்றுதல், அங்கிருக்கும் பழங்கள், இலை தழைகள் எல்லாவற்றையும் சேர்ந்து சாப்பிடுதல், ஒன்றாக விளையாடுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்கிறது. ஆனாலும் பூனாச்சி சாதாரண ஒரு வெள்ளாடுதான் அப்படி இருக்கும்போது அதனுடைய கணவனையோ அல்லது காதலனையோ தேர்ந்தெடுக்கும் உரிமை அதற்கு இருக்கிறதா?

கிழவனும், கிழவியும் பூனாச்சியை என்னதான் அழகாக வளர்த்தாலும், பூனாச்சி ஒரு ஆடுதான் அதனால் அவளுக்கு பருவம் வந்ததும் அவள் யாருடன் சேரவேண்டும் என்பதை இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். பூவனுடன் சேரக்கூடாது என்பதையும் இவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இன்னொரு ஆட்டுடன் சேர்த்து வைக்கவேண்டும் என்பதையும் இவர்கள் தான் முடிவு செய்கிறார்கள்.

இப்படி இருக்க பூவனை மனதில் நினைத்துக்கொண்டு இன்னொருத்தனுடன் குடும்பம் நடத்தி குட்டிகளை பெற்றெடுப்பது என்பது பூனாச்சிக்கு எந்த மாதிரியான ஒரு விஷயமா இருக்கும். அவளுக்கு உணர்வுகளே இல்லை என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால் தனக்கான கிடாயுடன் இணைசேர நினைக்கும்போது அவர்கள் கொடுக்கிற ஒளி. மற்ற கிடாய் தன்னை சுற்றிவரும்போது பூனாச்சி அவற்றை தவிர்ப்பது. இந்த மாதிரியான விஷயங்களை பார்க்கும்போது சாதாரண ஆடு என்றாலுமே அவர்கள் யாருடன் சேர விருப்பம் கொள்கிறார்கள் என்பதும், அம்மா குட்டி என்னும் உணர்வுகளையும் மிகவும் அழகாக இந்த கதையில் பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாக கிடாய் ஆட்டை என்ன செய்வார்கள் கோவிலுக்கு நேந்துவிட்டு வெட்டுவார்கள், இல்லையென்றால் கரி அடித்து சாப்பிடுவார்கள் இது போன்று இருக்கும் இடத்தில் பூவன் இருப்பானா என்று பூனாச்சி ஏங்குகிறாள். நீண்ட நாட்களுக்கு பின் பூனாச்சியும், பூவனும் சந்தித்துக்கொள்கிறார்கள் அப்போது இருவரும் பேசிக்கொள்வதுபோல் ஒரு நிகழ்வு இருக்கும் ஆனால் அது அவர்கள் பேசுவது கிடையாது. இப்படி தான் பேசிக்கொள்கிறார்களோ என்பது போல் ஆசிரியர் எழுதி இருக்கிறார்.

இவர்கள் பார்த்த பிறகு என்ன ஆகிறார்கள் என்பதும், பிறகு பூவன் பிரிவதும், தன்னுடம் இருந்த கிடாய் வெட்டும்போது அதன் தலை விழுவதும், தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த, தன் பக்கத்தில் இருந்த ஒரு கிடாய் உயிரை விடுவதும் அப்போது பூனாச்சிக்கு ஏற்படும் உணர்வு இவற்றையும் ஆசிரியர் அழகாக விளக்கியுள்ளார். இவ்வளவு நடந்தாலும் கிழவனும், கிழவியும் தன்னை எப்படி பார்த்துக்கொள்கின்றனர். நம்மிடம் இருக்கும் பாசமும் நிஜம்தானா என்று பூனாச்சிக்கு சந்தேகம் வருகிறது. ஏனென்றால் தான் இந்த கிடாயுடன் தான் சேர வேண்டும், இந்த கிடாயுடன் சேர கூடாது.

என்னுடைய கிடாய்களையும் வெட்டிவிடுவீர்கள் இவற்றை யோசிக்கும்போது இது பாசம் தான என்று ஒரு கேள்வி எழுகிறது. பூனாச்சியின் கண் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை இந்த கதையில் அழகாக சொல்லி இருக்கிறார். நம் உலக அழகை விடவும் பூனாச்சியின் உலகம் அழகு கிடையாது. ஏனென்றால் நமக்கு தேவையானதை நாம் தேர்ந்தெடுத்து கொள்ளும் இடத்தில் இருக்கிறோம். ஆனால் பூனாச்சியின் வாழ்க்கை அப்படி கிடையாது. பூனாச்சி வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது. அவற்றையும் கடந்து பூனாச்சிக்கு இந்த உலகம் எவ்வளவு அழகாக தெரிகிறது. முதல் முதலில் ஆடு மேய்வதற்கு போகும்போது கிழவனின் தோளில் அமர்ந்திருப்பாள் அந்த தருணங்களை அவள் எப்படி விவரிக்கிறாள்.

கிழவிக்கும், பூனாச்சிக்கும் இடையில் ஏற்படும் உரையாடல் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை இந்த நாவலில் குறிப்பிட்டிருப்பதை படிக்கும்போது பூனாச்சியுடன் ஒன்றிணைவது போல் தோன்றும். அந்த கருப்பாட்டிற்காக நாமும் வருத்த பட ஆரம்பித்துவிடுவோம். அந்த கிராமத்திற்கே சென்று வந்தது போல் ஒரு உணர்வு தோன்றும்.

Latest Slideshows

Leave a Reply