Puducherry Girl Murder Case : புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு தண்டனை (Puducherry Girl Murder Case) கிடைக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் சிறுமி படுகொலை :

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் இரண்டாவது மகள் (9) அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிறுமியின் தந்தை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒரு சிசிடிவி கேமராவில் மட்டும் சிறுமி நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள்தோறும் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போதும் சிறுமி குறித்த தகவல் தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்தனர். விசாரணையிலும் துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சோலை நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சாலைக்கும், கண்ணதாசன் சாலைக்கும் இடையே உள்ள கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, ​​சிறுமியின் கை, கால்களை கட்டி துணியில் கட்டி கால்வாயில் வீசியிருப்பது தெரியவந்தது. சிறுமியின் தந்தையை அழைத்து வரப்பட்டபோது, அது தனது மகள் என்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்யப்பட்டு வீசி எறியப்பட்டது தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாகக் கூறி, கஞ்சா போதையில் இருந்த 19 வயது வாலிபர், அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் ஆடைகளை கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அங்கு வந்த 57 வயதுடைய நபர் ஒருவர் அந்த இளைஞனுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மனித மிருகங்கள் தன்னை வேட்டையாடுவதை உணர்ந்த சிறுமி, பயத்தில் கத்தவே, ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின், சிறுமியின் உடலை முட்டையில் கட்டி வைத்து சாக்கடையில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது. கொலையாளிகள் கைது செய்யப்பட்ட சூழலில், அவர்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Puducherry Girl Murder Case- அரசியல் தலைவர்கள் கண்டனம் :

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது. கனத்த இதயத்துடன், மகளை இழந்து வாடும் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை கொடூரமாகவும், இரக்கமின்றியும் கொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை வழங்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் விஜய்.

சிறுமி கொலை குறித்து பா.ம.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுமையை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் (Puducherry Girl Murder Case) கைது செய்யப்பட்டவர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கும் மரண தண்டனை விதித்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்த குற்றத்தை தடுக்க தவறிய முத்தியால்பேட்டை காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலிறுத்தியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன், தமிழிசை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குஷ்பு, அண்ணாமலை, கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply