Pushpa 2 Movie Crew Met Accident: விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழுவினர்
அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமாறன் இயக்கி வரும் படம் புஷ்பா 2 ஆகும். இந்த படக்குழுவினர் சென்ற பேருந்து தெலுங்கானா மாநிலத்தில் விபத்தாகியுள்ளது.
புஷ்பா படத்தின் படக்குழுவினர் சென்ற பேருந்து நேற்று விபத்திற்குள்ளாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் நால்கொண்டா பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் ஹரி ஹர வீர மல்லு படப்பிடிப்பில் சமீபத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு திரைப்பட துறையில் மற்றொரு துரதிஷ்டமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. திரைப்பட ரசிகர்கள் பெரிதும் ஆவளோடு எதிர்பார்த்து வரும் படமான புஷ்பா 2 படக்குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து பெரும் விபத்தில் சிக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நால்கொண்டா பகுதியில் படக்குழுவினர் சென்ற பேருந்திற்கு எதிரே வந்த தனியார் பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் சில ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு பலத்த காயங்களும், மற்றவர்களுக்கு சிறு காயங்களும் ஏற்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இரண்டு சம்பவங்களிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சில தமிழ் படங்களின் படப்பிடிப்பு தளங்களிலும் இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளன. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் லைட்மேன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து மேலும் படப்பிடிப்பு தளத்தில் சில சம்பவங்கள் நடந்ததன் விளைவாக, ஒரு படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்கிற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.