RC 16 Movie Pooja : ராம் சரணின் "RC16" திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்

ராம் சரண் நடிக்கும் ‘RC 16’ படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், தற்போது படத்தின் பூஜை (RRC 16 Movie Pooja) நேற்று (மார்ச், 20) பிரம்மாண்டமாக நடைபெற்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் நடித்த பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர் பட்டாளமும் நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார்.

ராம் சரண் – இப்படத்தைத் தொடர்ந்து நட்சத்திர இயக்குனர் புச்சி பாபு சனாவுடன் இணைந்து ‘RC16’ படத்தில் நடிக்க உள்ளார். இதில், மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தனது முதல் படமான ‘உப்பென்னா’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனரும், பிரபல இயக்குனர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார். படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து வழங்குகின்றன.

பூஜையுடன் தொடங்கிய ' RC16' (RC 16 Movie Pooja)

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான ‘RC 16’ படத்தின் பூஜை நிகழ்வு (RC 16 Movie Pooja) நேற்று (மார்ச், 20) நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்பக் குழுவும் இணைந்தது. தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர். சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குனர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாகு கரபதி, ராம் அச்சந்தா, எம்.எல்.ஏ ரவி கொட்டிப்பட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, கிருஷ்ணா ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். காலை 10:10 மணிக்கு பிரம்மாண்டமான பாரம்பரிய பூஜையுடன் விழா தொடங்கியது.

பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் புச்சி பாபு சனாவிடம் ஒப்படைத்தார். ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கும் நட்சத்திர இயக்குனர் ஷங்கர், முதல் காட்சியை இயக்க, போனி கபூர் மற்றும் அன்மோல் சர்மா கேமராவை இயக்க,  சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்தனர். இதனைத்தொடர்ந்து படம் பற்றி பேசிய ராம் சரண், புச்சி பாபுவின் சினிமா மீதுள்ள அதீத காதலை பாராட்டி, அவருடனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது என்றார்.

மேலும், முதன்முறையாக ஜான்வி கபூருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராம் சரண், நானும் ஜான்வி கபூரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள் இப்போது கூறினார். இப்போது அது நிறைவேறியுள்ளது என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இவரைத் தொடரந்து ஜான்வி கபூர் பேசுகையில், இந்தப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தில் நடிக்க என்னை அணுகிய இயக்குனர் புச்சிபாபுவுக்கு நன்றி. படக்குழுவினரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்றார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் போனி கபூர்,  ராம் சரண் கொடுத்த வாய்ப்பின் மூலம் தெலுங்குப் படங்களை தயாரிக்கும் ஆர்வத்தை பெற்றேன் என்று தெரிவித்தார். பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply