Saripodhaa Sanivaaram Review : சரிபோதா சனிவாரம் திரைப்படத்தின் திரை விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா, நானி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள சரிபோதா சனிவாரம் திரைப்படத்தின் முழுமையான திரை விமர்சனத்தை (Saripodhaa Sanivaaram Review) தற்போது காணலாம். எஸ்.ஜே.சூர்யா, நானி, பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சரிபோதா சனிவாரம் ஆகும். அதிதி பாலன், அபிராமி, சுபலேகா சுதாகர், பி.சாய்குமார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் விவேக் ஆத்ரேயா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் சூர்யாஸ் சேட்டர்டே என வெளியாகியுள்ளது. நானியின் 31 வது படமாக 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனத்தை (Saripodhaa Sanivaaram Review) பார்க்கலாம்.

சரிபோதா சனிவாரம் படத்தின் கதை :

ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கோபப்படும் இளைஞனாக சூர்யா (நானி) வளர்கிறார். சூர்யாவின் தாயார் புற்றுநோயால் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க இருக்கிறார். தான் இறப்பதற்குள் தனது மகன் மற்றும் மகளிடம் அனைத்து முக்கிய விஷயங்களையும் கூறுகிறார். சூர்யாவின் கோபத்தைக் கட்டுப்படுத்த அவனுடைய அம்மா ஒரு வழியைக் கூறுகிறார். ஒவ்வொரு முறையும் கோபம் வரும் போதும் அதை வாரத்தில் ஒரு நாள் மட்டும் காட்ட வேண்டும். எவ்வளவு கோபம் வந்தாலும் வாரம் ஒருமுறை தான் கோபத்தை காட்டுவேன் என்று சூர்யா சத்தியம் செய்கிறார். வாரம் முழுவதும் அமைதி காத்து, தன்னைக் கோபப்படுத்தும் நபர்களின் பெயர்களை டைரியில் எழுதி வைத்து கொள்கிறான். சரியாக சனிக்கிழமை ஆனதும் ஒவ்வொருத்தராக தேடிப் பிடித்து அடித்து நொறுக்குவது என ஹீரோவின் அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.

மறுபுறம், இன்ஸ்பெக்டர் தயானந்த் (எஸ்.ஜே.சூர்யா) தனது சகோதரனிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க போராடுகிறார். தனது அண்ணன் மீது அவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்பது எஸ்.ஜே.சூர்யாவின் வழக்கமான ஒரு காட்சியில் சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல்வாதியான அண்ணன் மீது கோபம் வரும்போதெல்லாம் அப்பாவி மக்களை கொடூரமாக தாக்குகிறார். அதே காவல் நிலையத்தில் புதிதாக வந்த கல்யாணி (பிரியங்கா மோகன்) தான், சிறுவயதில் இருந்தே காதலிக்கும் சூர்யாவின் அத்தையின் மகள். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத இந்த இரண்டு பேரும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதற்கான சூழல்களை அமைத்து, ஒரு ஆக்‌ஷன் கலந்த குடும்பப் பொழுதுபோக்கு படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

Saripodhaa Sanivaaram Review :

தெலுங்குத் திரையுலகில் புதுமையான ஐடியாக்களுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில் சுவாரசியமான யோசனையாக இருந்தாலும் அதில் தேவையில்லாத துணைக்கதைகளை கலக்கியிருக்கிறார் இயக்குநர். அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்த இயக்குநர் தீவிர சபதம் எடுத்தது போல், அம்மா சென்டிமென்ட், அக்கா சென்டிமென்ட், மாஸ் ஷோ ஆக்ஷன், காதல், வில்லன், வில்லனுக்கு அண்ணன், அடிமைப்பட்டவர்களைக் காப்பாற்றும் ஹீரோ என ஆரம்பித்து சுற்றி வருகிறார்.

காதை பிளக்கும் இசையுடன் பின்தொடர்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். இதற்கிடையில், சில கூடுதல் வில்லன்கள் ஆக்‌ஷன் காட்சிகளுக்குத் தேவைப்படும் என்பதால் படம் முழுவதும் தோன்றுகிறார்கள். எதார்த்தமான கதைகளில் நானியின் இயல்பான நடிப்பு இந்த மாதிரியான பில்டப் படங்களில் அதிகம் கவனம் ஈர்ப்பதில்லை. படம் முழுவதும் பிரியங்கா மோகனுக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தைப் போலவே இப்படத்தின் கதைக்களமும் ஒரு சுவாரசியமான யோசனையாக உள்ளது. ஆனால், சூப்பர் ஹீரோ படமாக இருந்தாலும், ஓரளவு நம்பகத்தன்மைக்காக அதை யதார்த்தத்திற்கு அருகில் வைத்திருக்கிறார் இயக்குநர் என்பது மாவீரனின் மிகப்பெரிய வெற்றி. ஆனால் எதார்த்தமான கதையாக வரும் சரிபோதா சனிவாரம், கொஞ்சம் சூப்பர் ஹீரோ படம் பில்டப் கொடுத்ததால் அது சலிப்பை (Saripodhaa Sanivaaram Review) ஏற்படுத்துகிறது.

Latest Slideshows

Leave a Reply