Shot Put Asian Games 2023 : குண்டு எறிதலில் 72 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு பதக்கம்…!!!

Shot Put Asian Games 2023: 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 33- வது பதக்கம் ஆகும். ஆசிய
விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 72 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

சீனாவின் ஹாங்சோ நகரில் தற்போது நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவு விளையாட்டுகள் நேற்று தொடங்கின. தொடக்க நாளிலேயே குண்டு எறிதல் போட்டியில் 24 வயதான இந்திய வீராங்கனை கிரண் பலியான் 17 புள்ளி 36 மீட்டர் தூரம் வீசி இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குண்டு எறிதலில் பார்பரா வெப்ஸ்டருக்கு பிறகு பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை கிரண் பலியான் பெற்றுள்ளார்.

கடந்த 1951 ல் நடந்த முதல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பார்பரா வெப்ஸ்டர் வெண்கலம் பதக்கம் வென்றிருந்தார். அவர் மும்பையை சேர்ந்த ஆங்கிலோ-இந்தியர் ஆவார். அதற்குப் பின் 72 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தற்போது பதக்கம் கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியர் ஒருவர் பதக்கம் வென்றுள்ளார். மீரட் போக்குவரத்து தலைமை காவலரின் மகளான பலியான் குண்டு எறிதல் வீராங்கனையானது கதை சுவாரஸ்யமானது.

அவர் பள்ளி நாட்களில் பல தடகள விளையாட்டுக்களில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார். அப்போது ஒருமுறை கிரண் பலியான் பெயரை தவறுதலாக மண்டல அளவிலான குண்டு எறிதல் போட்டியில் சேர்த்து விட்டனர். அந்த போட்டியில் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதால் ஆர்வமின்றி கலந்து கொண்ட கிரணுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. எனினும் குண்டு எறிதல் விளையாட்டுகளில் அதீத கவனம் செலுத்தி இந்தியாவுக்கு தற்போது பெருமை சேர்த்திருக்கிறார். குண்டு எறிதலில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான மன்ப்ரீத் கவுர், ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

Latest Slideshows

Leave a Reply