Tamilians Rescued From Sudan: சூடானில் இருந்து மீண்டு வந்த தமிழர்கள்
ஆபரேஷன் காவேரியின் முதல் கட்ட நடவடிக்கையில் 360 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் விமானம் மூலம் சென்னை மற்றும் மதுரைக்கு வந்தடைந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு இடையே மோதல் தீவிரமடைந்தது. இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த உள்நாட்டில் நடைபெறும் போர் காரணமாக நாடு முழுவதும் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து, ஆபரேஷன் காவேரி என்ற பெயரில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்திய அரசு மீட்டு வருகிறது. இதையடுத்து ஆபரேஷன் காவேரி மூலம் முதல்கட்டமாக 360 பேர் மீட்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் உள்ளனர். அதில் 5 பேர் சென்னையும் 4 பேர் மதுரையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை மற்றும் மதுரைக்கு வந்தடைந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் சூடானில் இருந்து திரும்பிய மாணவி அங்குள்ள நிலவரம் குறித்து கூறும்போது, “நாங்கள் வசித்த பகுதியை கைப்பற்றுவதற்கு இரு தரப்பினரிடையே தாக்குதல் நடத்தப்படுகிறது.பொதுமக்களை தாக்க மாட்டோம் என கூறினாலும் பொதுமக்கள் பலர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போர் தொடங்கிய நாள் முதல் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தடைபட்டன. இதனால் எங்களிடம் இருந்த பொருட்களை சிக்கனமாக பயன்படுத்தினோம். சூடானில் இருந்து இந்தியா வருவதற்கு எங்களுக்கு உதவியாக இந்திய தூதரக அதிகாரிகள் இருந்தார்கள். இந்த நேரத்தில் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜோன்ஸ் திரவியம் கூறுகையில் “சூடானில் 3,000 இந்தியர்கள் வசிக்கும் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே இருந்தோம். சூடானில் இந்தியர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினோம், தமிழர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டோம். இந்தியத் தூதரகமும் தினசரி எங்களின் நிலைமையை எங்களுக்குத் தெரிவித்ததோடு, பல்வேறு நடவடிக்கைகளுக்காக 12 மணிநேரம் கடல் வழியாகப் பயணம் செய்து ஜெட்டாவை அடைந்தோம். அங்கிருந்து விமானம் மூலம் நாடு திரும்பி உள்ளோம்.
நானும் என் மனைவியும் சூடானில் உள்ள இந்தியன் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் குழந்தைகள் அங்கு மருத்துவம் படித்து வந்தனர். உள்நாட்டுக் கலவரத்தால் சூடானில் எங்களின் உடைமைகள் அனைத்தையும் இழந்தோம். நமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எங்கள் குழந்தைகள் இங்கு மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும்,” என்றார்.