Thaipusam 2024 : முருகப்பெருமானின் தைப்பூச வரலாறு

பஞ்சபூதங்கள் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் நாளாக தைப்பூசம் விளங்குகிறது. எனவே இந்த நாளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஜோதிட ரீதியாக பூசம் நட்சத்திரம் சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரமாகும். இது தை மாத பெளர்ணமி தினத்தை ஒட்டி வருவதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. தைப்பூசம் என்பது சிவ-சக்தி ஐக்கியமான ரூபமாக விளங்குவதால் தைப்பூசம் முருகப்பெருமானை வழிபடும் நாளாகும். முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் விரத நாட்களில் தைப்பூசம் மிகவும் முக்கியமானது.

தைப்பூச திருவிழா உள்ளூர் திருவிழாவாக கருதப்பட்டாலும், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்துதல், காவடி போன்றவற்றை ஏந்தி முருகப்பெருமானை வழிபட வருகின்றனர். தை மாதம் பெளர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் வரும் நாளை தைப்பூச தினமாகக் கொண்டாடுகிறோம். தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றை தற்போது காணலாம்.

தைப்பூசம் வரலாறு :

முனிவர்களுக்குப் பல்வேறு துன்பங்களை அளித்து வந்த தாரகாசுரன் என்ற அசுரனை முருகப் பெருமான் வதம் செய்தது இந்த நாளில்தான். இந்த நாளில்தான் முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்டதும், அன்னை பராசக்தியின் அனைத்து சக்திகளையும் உள்ளடக்கிய சக்திவேலையைப் பெற்றதும் இதே நாளில் தான். இந்த தைப்பூசத் திருநாளில் தான் பார்வதி தேவி முருகப்பெருமான் தனக்கு அளித்த சாபம் நீங்கப் பெறத் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இதே நாளில்தான் முருகப்பெருமான் தன் தந்தை ஈசனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளைப் உபதேசம் செய்தார். வள்ளியை திருமணம் செய்ததால் ஊடல் கொண்ட தெய்வாணையை சமாதானம் செய்து வள்ளி-தெய்வாணை சமேதராக முருகப்பெருமான் காட்சி தந்ததும் தைப்பூச நாளில் தான் என சொல்லப்படுகிறது.

தைப்பூச திருநாள் சிவன் மற்றும் பார்வதி தேவியுடன் தொடர்புடைய நாளாக கருதப்படுகிறது. மார்கழி திருவாதிரையில் சிதம்பரத்தில் சிவபெருமான் தனியாக நடனமாடுவதைக் கண்ட பார்வதிதேவிக்கு தானும் அவ்வாறே ஆனந்த தாண்டவம் ஆட வேண்டும் என ஆசைப்பட்டு, பராசக்தி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடியது தைப்பூச நாளில் தான். சிதம்பரத்தில் சிவன் மற்றும் பார்வதி இருவரும் இணைந்து ஆனந்த நடனம் ஆடியதும் தைப்பூசத் திருநாளில் தான். இதே தைப்பூசத் திருநாளில் தான் முருகப் பெருமான் அகத்தியருக்குத் தமிழ் கற்பித்ததாகக் கூறப்படுகிறது. தைப்பூச நாளில் நீர் படைக்கப்பட்டதாகவும், அதிலிருந்து உலக உயிர்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது.

தைப்பூச விரத பலன்கள் :

இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருநாளில் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள முருகப்பெருமானின் திருவுருவத்தை மலர்களால் அலங்கரித்து தீபம் ஏற்ற வேண்டும். அன்று மூன்று வேளையும் பாலும் பழமும் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு உரிய கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்ற பாடல்களை ஓத வேண்டும். இதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் “ஓம் சரவண பவ” என்ற ஆறு எழுத்து மந்திரத்தை உச்சரித்து முருகனை வழிபட வேண்டும். மாலையில் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு சந்திரனை தரிசித்த பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். சிறப்பு மிக்க தைப்பூச திருநாளில் பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள்.

குழந்தை வரம், திருமணம், நீண்ட ஆயுள், குடும்ப ஒற்றுமை ஆகியவை கிடைப்பதுடன், தைப்பூசத்தன்று முருகனுக்கு பூஜை, அபிஷேகங்களை கண்டால் சகல பாவங்களும் விலகும். தோஷங்கள் நீங்கி விரும்பிய காரியங்கள் நிறைவேறும். தைப்பூச விரதம் கடைப்பிடிக்கும் முருக பக்தர்கள் மார்கழி மாதம் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

Thaipusam 2024 - 2024 தைப்பூச நேரம் :

தைப்பூசத் திருநாள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி (Thaipusam 2024) வருகிறது. இது மகத்தான நன்மைகளைத் தருகிறது மற்றும் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இந்த ஆண்டு தைப்பூசம் குரு பகவானின் வியாழன் அன்றும் வருவதால் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பெளர்ணமி திதி ஜனவரி 24 ஆம் தேதி இரவு 10.44 மணிக்கு தொடங்கி ஜனவரி 25 ஆம் தேதி இரவு 11.56 மணிக்கு முடிவடைகிறது. அதே சமயம் ஜனவரி 25ம் தேதி காலை 09.14 மணிக்கு மேல் பூசம் நட்சத்திரம் தொடங்குகிறது. ஜனவரி 26ம் தேதி காலை 11.07 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால் ஜனவரி 25ம் தேதியே (Thaipusam 2024) தைப்பூச வழிபாடு நடத்த வேண்டும். இந்நாளில் முருகப்பெருமானை மட்டுமின்றி பார்வதி தேவி, சிவன், குரு பகவான் ஆகியோரையும் வழிபடுவது சிறப்பு.

Latest Slideshows

Leave a Reply