Thlasimathi Qualifies Paralympics Finals: தமிழக வீராங்கனை பாராலிம்பிக்கில் பேட்மிண்டன் ஃபைனலுக்கு தகுதி

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

Thlasimathi Qualifies Paralympics Finals: பேட்மிண்டன் ஃபைனலில் தமிழக வீராங்கனை

பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில், இந்தியர்கள் அபார திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி, பெண்களுக்கான SU5 பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஷ் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 23-21 மற்றும் 21-17 என்ற கணக்கில் நாற்பது நிமிடங்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இந்தியாவின் எட்டாவது பதக்கம் உறுதி செய்யப்பட்டது. மேலும், துளசிமதி முருகேசன் பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார், அதே நேரத்தில் அரையிறுதியில் தோல்வியடைந்த மனிஷா, அடுத்து வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியிடுவார்.

துளசிமதி முருகேசன்

22 வயதான துளசிமதி முருகேசன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2022 சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் SU5 மற்றும் SL3 ஆகிய பிரிவுகளின் கீழ் வெள்ளி, தங்கம் மற்றும் வெண்கலம் போன்ற பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த டிசம்பரில் 5வது ஃபஸ்ஸா துபாய் பாரா பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2023ல், துளசிமதி மானசி ஜோஷியுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் தங்கப் பதக்கத்தை வென்றார். கலப்பு இரட்டையர் SL3 மற்றும் SU5 பிரிவில், நித்தேஷ் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். துளசிமதி ஹைதராபாத்தில் பயிற்சியாளர்கள் கோபிசந்த் மற்றும் இர்பான் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் பாராலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மனிஷா ராமதாஸ்

19 வயதான மனிஷா ராமதாஸும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் தான். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 2022ல் இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் பங்கேற்றார். அதே ஆண்டில் ஸ்பெயின் (நிலை 2) பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்றார். அந்த ஆண்டில் மட்டும் 11 தங்கம் மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்ற அவர், 22 ஆகஸ்ட் 2022 அன்று SU5 பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையானார். இந்த நிலையில், மனிஷா இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தாலும், வெண்கலத்திற்கான வாய்ப்பில் அவர் தொடர்ந்து இருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply