TNPL 2023 Dindigul vs Salem: திண்டுக்கல் அணிக்கு 6வது வெற்றி! playoff செல்வதை உறுதி செய்தது..
சேலத்துக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
TNPL 2023 Dindigul vs Salem
டிஎன்பிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடந்து வருகிறது. முக்கியமான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. முக்கியமான இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் பாபா இந்திரஜித் முதலில் சேலம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இந்த போட்டியில் அஸ்வின் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து களமிறங்கிய சேலம் அணியில் தொடக்க வீரர்கள் கவுஷிக் காந்தி, அரவிந்த் இருவரும் 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விளையாடிய கவின் 25 ரன்களும், மோகித் ஹரிஹரன் 21 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் குவித்தார்.
இவரது அதிரடியால் சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்ரவர்த்தி, சுபோத் பாட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்தாக இந்த எளிய இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி பேட்டிங்கை தொடங்கியது.
எளிய இலக்கு :
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த விமல்குமார் – கேப்டன் பாபா இந்திரஜித் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விமல் குமார் 42 ரன்களில் ஆட்டமிழக்க, ஆதித்ய கணேஷ் 13 பந்துகளில் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இது ஒருபுறமிருக்க, அபாரமாக விளையாடிய பாபா இந்திரஜித் 50 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி.என்.பி.எல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் குவாலிபையர் 1 ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் இடம்பிடித்துள்ளது. அந்த ஆட்டத்தில் ஷாருக்கான் தலைமையிலான கோவை லைக்கா கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர்கொள்கிறது.