T20 WC 2024 IND vs PAK: 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

T20 WC 2024 IND vs PAK: டி20 உலகக் கோப்பையின் 19வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா - பாகிஸ்தான்

19வது லீக் போட்டி நியூயார்க் நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தொடங்கியது.

T20 WC 2024 IND vs PAK: 119 ரன்களை குவித்த இந்தியா

அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களம் இறங்கினார்கள். இதில் 3 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற விராட் கோலி 1 பவுண்டரி மட்டும் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 12 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 13 ரன்களை எடுத்தார். அப்போது களத்தில் இருந்த ரிஷப் பண்ட் உடன் அக்ஸர் படேல் ஜோடி சேர்ந்தார். அவர் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் மொத்தம் 20 ரன்கள் எடுத்தார். மறுபுறம் ரிஷப் பண்ட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அக்ஸர் படேலின் விக்கெட்டுக்கு பின் சூர்யகுமார் யாதவ் 8 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 3 ரன்னில் ஆட்டம் இழக்க அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 31 பந்துகளில் 6 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 42 ரன்கள் எடுத்தார். பின்னர் ரவீந்திர ஜடேஜா டக் அவுட்டாக, ஹர்திக் பாண்டியா 7 ரன்களில் வெளியேறினார். 17.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அடுத்து களம் இறங்கிய அர்ஸ்தீப் சிங் 9 ரன்களும், முகமது சிராஜ் 7 ரன்களும் எடுத்தனர். 19 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் எடுத்தது.

T20 WC 2024 IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முஹமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். அதன்படி பாபர் அசாம் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய உஸ்மான் அலியும் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார், மறுபுறம் முஹமது ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே களம் இறங்கிய பஹர் ஷமான் 13 ரன்களில் ஹர்திக் பாண்டியாவிடம் விக்கெட்டை இழந்தார். இந்நிலையில், நிதானமாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான், இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சர் என மொத்தம் 31 ரன்கள் எடுத்தார். அதன்பின் இமாத் வாசிருடன் ஷதாப் கான் ஜோடி சேர்ந்தார். ஆனால் வந்தவுடன் ஹர்திக் பாண்டியா ஜோடியை பிரித்துவிட்டார். ஷதாப் கான் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இப்திகார் அகமது 5 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Latest Slideshows