2018 Everyone is a Hero : இந்தியா சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் ‛2018' மலையாள திரைப்படம்

2018 Everyone is a Hero :

அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் (2018 Everyone is a Hero) தேர்வாகி உள்ளது. இதனை இந்திய திரைப்பட கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு இந்திய திரைப்பட கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது.  அதில் 2018 Everyone is a Hero படம் இந்திய சார்பாக ஆஸ்கருக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர். ஆண்டுதோறும் சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர், தொழில்நுட்பக்கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதானது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஆஸ்கார் விருது போட்டிக்கு இந்தியாவின் சார்பாக ‘2018 Everyone is a Hero’ என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018 Everyone is a Hero’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நோபின் பால் இசையமைத்திருக்கும் இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு கேரளா மாநிலம் சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் இரசிகர்களிடையே மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும் படம் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ.200 கோடி மேல் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற SEPTIMUS விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகர் என்ற விருதினை இதே ‘2018 Everyone is a Hero’ படத்துக்காக டொவினோ தாமஸ் வென்றார். “ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நிற்பதில்தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மைத் தாக்கிய பெருவெள்ளத்தால் கேரளா வீழத்தொடங்கியது. பிறகு நாம் எத்தகைய மன உறுதி உள்ளவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம்” என்று விருது குறித்து தனது நெகிழ்ச்சியினைத் தெரிவித்திருந்தார் டொவினோ.

2024 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது :

2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட் கட்டடத்தில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ படம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த படம் விருது பெறவில்லை. தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் சிறந்த பாடலுக்கான பட பிரிவில் விருது வென்று நம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. ‘2018’ மலையாளப் படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுப் போட்டிக்குத் தேர்வானதையடுத்து பலரும் படக்குழுவினருக்குத் இணையத்தளப் பக்கத்தில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply