T20 WC 2024 IND vs IRE: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அயர்லாந்துக்கு எதிரான (T20 WC 2024 IND vs IRE) முதல் போட்டியில் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை டி20 உலகக் கோப்பையை நோக்கி திரும்பியுள்ளது. கடந்த 2ம் தேதி தொடங்கிய உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தியா vs அயர்லாந்து : T20 WC 2024 IND vs IRE

96 ரன்களை எடுத்த அயர்லாந்து :

டி20 கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக காரத் டெலனி 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த அணி 16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்களும், பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா : T20 WC 2024 IND vs IRE

இதை தொடரந்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். ஆனால் மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா 52 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் 36 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 12.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 97 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து தரப்பில் மார்க் அடேய்ர், பெஞ்சமின் வைட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற  கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். எம்எஸ் தோனி 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ரோஹித் சர்மா தற்போது 42 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply