Happy Pongal 2024 - Platform Tamil

Happy Pongal 2024 : பொங்கல் பண்டிகையின் வரலாறு

Happy Pongal 2024 :

பொங்கல் பண்டிகை தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்கிறது. இந்த தை திருநாளில் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதோடு, விவசாயத் தொழிலில் தன்னுடன் உழைத்த கால்நடைகளுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கின்றனர். போகிப் பொங்கல், சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என சில இடங்களில் பொங்கல் பண்டிகை நான்கு நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் என்று சொன்னவுடனே கரும்பு, ஜல்லிக்கட்டு, பொங்கல், கும்மி என எல்லோருக்கும் தெரியும், ஆனால் இவற்றின் வரலாறு தெரியுமா? இவை ஏன் கொண்டாடப்படுகின்றன என்பதை அறிந்து கொள்வோம்.

Happy Pongal 2024 : தை மாதம் 1ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு நல்ல மகசூல் தரும் மாதம் இந்த பொங்கல். இந்த விளைச்சலை நமக்குக் கொடுத்த இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் சர்க்கரைப் பொங்கலைச் சமைத்து, மாட்டுக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான் பொங்கல். பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்னதாகவே, பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க துவங்கி விடுகின்றனர். வீட்டைச் சுத்தம் செய்தல், புதிய சுண்ணாம்பு அடித்தல் என ஊரே திருவிழாக் கோலத்தில் காணப்படும். பொங்கல் விழா இந்த திருநாட்டில் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

போகி பொங்கல் :

இந்த போகி பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளான பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாகும். பழைய மற்றும் பயனற்ற பொருட்களை எரிக்கும் வழக்கம் உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமின்றி நம் மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் போக்கவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை எல்லோர் வீட்டிலும் கொண்டாடப்படுவதில்லை ஆனால் ஒரு சில வீடுகளில் தான் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை கொண்டாடப்படும் வீட்டின் மேற்கூரையில் பூலாப்பூ, காப்பு கட்டுதல் ஆகிவற்றை செய்வார்கள். சங்க காலத்தில் இந்த நாளில் ஒப்பாரி வைப்பது பழக்கமாக இருந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன, ஒப்பாரி வைப்பதற்கான காரணம் புத்தர் இறந்த நாளாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

தைப்பொங்கல் :

தைப்பொங்கல் தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புது ஆடை வாங்குதல், வீட்டு வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள். வீட்டின் முன் புதிய அடுப்பு வைத்து, புதிய பானையில் புதிய அரிசியை வைத்து முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். ஒரு புதிய பானைக்கு புதிய மஞ்சளை காப்பாக அணிவர். பொங்கலுக்கு புதிய கரும்பு மற்றும் புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியதாகவே பயன்படுத்துவார்கள். பானையில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து பொங்கலிட தொடங்குவார்கள். பொங்கல் பொங்கும்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பொங்கலோ! பொங்கல் என்று முழக்கமிட்டு வரவேற்பார்கள். பொங்கல் பொங்கியதும் அதை சூரிய பகவானுக்கும், கால் நடைக்கும் படைத்து விட்டு பின்பு உண்பார்கள்.

மாட்டு பொங்கல் :

தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று மாட்டுத் தொழுவத்தையும் கால்நடைகளையும் சுத்தம் செய்து அதன் கொம்புகளில் வண்ணம் அடித்து மஞ்சள், குங்குமம் இட்டு, மாலைகள் அணிவித்து, மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மாட்டு பொங்கல் அன்று கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல் :

இந்தப் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். இது பெண்களுக்கான பண்டிகை. பொங்கல் தினத்தன்று மக்கள் தங்கள் உறவினர்களை சந்தித்து அன்பையும் உணவையும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த பண்டிகை அன்று ஒவ்வொரு ஊரிலும் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோல் அடித்தல், எறிதல், மரம் ஏறுதல், கபடி போன்ற தமிழர்களின் பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த பொங்கல் பண்டிகையில் நான்கு நாட்களும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதேபோல் இந்த வருடமும் 2024 பொங்கல் பண்டிகையை (Happy Pongal 2024) அனைவரும் சிறப்பாக கொண்டாடி மகிழுங்கள்.

Latest Slideshows

Leave a Reply