ஈரோட்டைச் சேர்ந்த திருநங்கை ரியா Miss Cougam 2024 பட்டம் வென்றார்

Miss Cougam 2024 :

தமிழ்நாட்டில் கடந்த 9ம் தேதி சித்திரைத் திருவிழா துவங்கியது. உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் ‘சாகை வார்த்தல்’ நிகழ்ச்சியுடன் சித்திரைத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.  தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூரு, கேரளா, கர்நாடகா, டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இத்திருவிழாவில் பங்கேற்க திருநங்கைகள் அதிக அளவில் வந்துள்ளனர். இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கூத்தாண்டவர் தேரோட்டமும் மற்றும்  திருநங்கைகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மிஸ் கூவாகம் மற்றும் மிஸ் திருநங்கை ஆகிய அழகிப் போட்டிகள் திருநங்கைகளின் நலன்களுக்காகவும் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சமூக நலத்துறை சார்பில் Miss Cougam 2024 நிகழ்ச்சி 22/04/2024 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஏராளாமான திருங்கைகள் கலந்து கொண்டு திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப நடமாடியும் ரேம்ப் வாக்கில் நடந்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர். போட்டியில் பங்கேற்ற திருநங்கைகளின் பொது அறிவு மற்றும் சமூக விழிப்புணர்வு சோதிக்கப்பட்டது. சமூகத்தின் எதிர்காலத்திற்கான  திருநங்கை போட்டியாளர்களின் பங்களிப்பும் நிகழ்வின் தேவைகளில் ஒன்றாக இருந்தது.

இந்த அழகிப் போட்டி (Miss Cougam 2024) மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இந்த அழகிப் போட்டியில் 27 திருநங்கைகள் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உதவி மருத்துவரான ரியா இந்த அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து அசத்தினார். இரண்டாவது இடத்தை தூத்துக்குடியை சார்ந்த நேகாம் மற்றும் மூன்றாம் இடத்தை சென்னையை சார்ந்த யுவான்ஜிலி ஜானும வென்றுள்ளனர். இந்த அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் இடம் பிடித்தவருக்கு ரூ.50,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.11,000 வழங்கப்பட்டது. தூங்கா நகரம் திரைப்படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று திருநங்கைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

Latest Slideshows

Leave a Reply